'தர்மபுரியில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை ஓய மாட்டோம்'
‘தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை ஓய மாட்டோம்’ என்று ஒகேனக்கல்லில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
'தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை ஓய மாட்டோம்' என்று ஒகேனக்கல்லில் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறினார்.
காவிரி உபரிநீர் திட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி 3 நாட்கள் நடைபயணத்தை பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஒகேனக்கல்லில் நேற்று தொடங்கினார். முன்னதாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் உள்ள ஒகேனக்கல் குடிநீர் திட்ட நீரேற்று நிலையத்தை அன்புமணி ராமதாஸ் நேரில் பார்வையிட்டார். அப்போது நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-
தர்மபுரி மிகவும் பின்தங்கிய மாவட்டம். இந்த மாவட்டத்தில் நிலத்தடி நீரில் புளோரோசிஸ் என்னும் நச்சுப்பொருள் கலந்துள்ளதால் இங்குள்ள மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். சுமார் 4 லட்சம் பேர் வேலை தேடி வெளி மாநிலங்களுக்கும், வெளி மாவட்டங்களுக்கும் குடிபெயர்ந்துள்ளனர். இந்த பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வாக காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் அணைகளை நிரப்ப வேண்டும்.
161 டி.எம்.சி. தண்ணீர்
வெள்ளப்பெருக்கு காலங்களில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் செல்லும் உபரிநீரில் சுமார் 3 டி.எம்.சி. தண்ணீரை நீரேற்றம் செய்து இத்திட்டத்தை நிறைவேற்ற முடியும். கடந்த 35 நாட்களில் காவிரி ஆற்றில் வினாடிக்கு சுமார் 2.5 லட்சம் கன அடிக்கும் கூடுதலான தண்ணீர் சென்றுள்ளது. சுமார் 161 டி.எம்.சி. தண்ணீர் கடலில் வீணாக கலந்துள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு ரூ.700 கோடி முதல் ரூ.800 கோடி மட்டுமே செலவாகும். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காலங்களில் வரும் உபரிநீரில் 3 டி.எம்.சி. அளவை மட்டுமே இந்த திட்டத்தில் பயன்படுத்த உள்ளதால் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு கடைமடை பகுதி வரை எந்த பாதிப்பும் ஏற்படாது. கடலில் வீணாக கலக்கின்ற தண்ணீரை எடுத்து மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைக்கிறோம்.
பல்வேறு கட்ட போராட்டம்
காவிரி உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பா.ம.க. சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் 10 லட்சத்து 30 ஆயிரம் பேரிடம் கையெழுத்து பெறப்பட்டு அப்போதைய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்தப்பட்டது. தேர்தல் நேரத்தில் அவரும் இந்த திட்டத்தை அறிவித்தார். பின்பு நிதியில்லை என்று கூறிவிட்டார்.
தற்போது உள்ள முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடமும் இந்த கோரிக்கையை நேரில் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை. 18 லட்சம் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கு இந்த திட்டம் தீர்வு என்பதை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்றும் வரை நாங்கள் ஓய மாட்டோம். இதில் காலதாமதம் ஏற்பட்டால் பா.ம.க. பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.ஏக்கள் வெங்கடேஸ்வரன், இரா.அருள், சதாசிவம், முன்னாள் எம்.பி. டாக்டர் செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.