காவிரி உபரிநீர் திட்டம் விரைவில் நிறைவேறும்
காவிரி உபரிநீர் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி
காவிரி உபரிநீர் திட்டம் விரைவில் நிறைவேறும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பொதுக்கூட்டம்
பாப்பிரெட்டிப்பட்டி மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் பொ.மல்லாபுரத்தில் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமை தாங்கினார். நகர செயலாளா் கவுதமன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் கீரை விஸ்வநாதன், ராஜேந்திரன், மெடிக்கல் சத்தியமூர்த்தி, சூடப்பட்டி சுப்பிரமணி, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன், தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் தி.மு.க. வெற்றி பெறும். ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் மூலம் 52 ஆயிரத்து, 611 விவசாயிகளுக்கு 3 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் மாணவ-மாணவிகளுக்கு பெண் தன்னார்வலர்கள் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது. மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1,550 மகளிர் குழுக்களுக்கு 58 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
விரைவில் நிறைவேறும்
ஒகேனக்கல் குடிநீர் திட்டம் முழுமையாக வரவில்லை என்று புகார் வந்தது. அதை முதல-அமைச்சரிடம் எடுத்து கூறி 2-வது ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற உள்ளது. ஒகேனக்கல்லில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை மக்கள் விவசாயத்திற்கு கேட்டு உள்ளனர். அதை நிறைவேற்ற முதல்-அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். காவிரி உபரிநீர் திட்டம் கூடிய விரைவில் நிறைவேறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், மாவட்ட துணை செயலாளர்கள் மணி, கிருஷ்ணகுமார், ராஜகுமாரி, மாவட்ட பொருளாளர் முருகன், தலைமை செயற்குழு உறுப்பினர் சித்தார்த்தன், மனோகரன், சென்னகிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் உண்ணாமலை, ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், பேரூராட்சி தலைவர்கள் செங்கல் மாரி, சாந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கோகுல்நாத் நன்றி கூறினார்.