காவிரி-வைகை-குண்டாறு திட்டம்: கந்தர்வகோட்டை பகுதியையும் இணைக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்


காவிரி-வைகை-குண்டாறு திட்டம்: கந்தர்வகோட்டை பகுதியையும் இணைக்க வேண்டும்-விவசாயிகள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Dec 2022 1:14 AM IST (Updated: 29 Dec 2022 5:07 PM IST)
t-max-icont-min-icon

காவிரி-வைகை-குண்டாறு திட்டத்தில் கந்தர்வகோட்டை பகுதியையும் இணைக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

புதுக்கோட்டை

நெல் கொள்முதல் நிலையங்கள்

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கவிதாராமு தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர். விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் நடராஜன்:- நில அளவைக்கு பணம் செலுத்தி எத்தனை நாட்களுக்குள் நிலத்தை அளந்து காண்பிக்கப்படும் என்பதை பணம் செலுத்திய நபருக்கு பதில் கடிதம் கொடுக்க வேண்டும். அரசு புறம்போக்கு நிலத்தை பட்டாபோடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். தென்னை மரத்தில் இருந்து கள் இறக்க அனுமதி வழங்க வேண்டும்.

கல்லணைக்கால்வாய் பாசனத்தாரர் விவசாயிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் கொக்குமடை ரமேஷ்:- நெல் கதிர் அறுவடை எந்திரங்கள் குறைவாக உள்ளதால் விவசாயிகளால் பயன்பெற முடியவில்லை. இந்த ஆண்டு அறுவடை செய்ய ஒரு மாத காலமே உள்ளதால் அறுவடை எந்திரங்கள் கூடுதலாக வாங்கி அனைத்து விவசாயிகளும் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தினையாகுடி, காரைக்கோட்டையில் நெல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும்.

உழவர்சந்தை தேவை

பாரதீய கிசான் சங்கத்தை சேர்ந்த கணேசன்:- பொங்கல் பரிசு தொகுப்பில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வெல்லம், தேங்காய் ஆகியவற்றை வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு திட்டத்தில் மஞ்சளையும் சேர்க்க வேண்டும். கண்மாய்களில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.

ஆரோக்கியசாமி:- கீரனூரில் உழவர்சந்தை அமைக்க வேண்டும். கீரனூர்-ஆதனக்கோட்டை சாலையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள ஒரு மரத்தை அகற்ற வேண்டும். குரங்குகள் தொல்லையை போக்க அதனை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த கோவிந்தராஜ்:- கரும்பு சாகுபடிக்கு சொட்டு நீர்பாசன திட்டத்தில் கூடுதல் தொகை வழங்க வேண்டும். புதுக்கோட்டையில் உள்ள பொதுத்துறையின் சர்க்கரை ஆலையை மேம்படுத்த வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்ததற்கு நன்றி.

காவிரி-குண்டாறு திட்டம்

ராதாகிருஷ்ணன்:- காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் கந்தர்வகோட்டை பகுதியையும் இணைத்து கால்வாய் வெட்டி தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும். கந்தர்வகோட்டையில் அரசு மகளிர் கலைக்கல்லூரி தொடங்க வேண்டும்.

மகேந்திரன்:- குன்றாண்டார்கோவில் அருகே கலியப்பட்டியில் ரேஷன் கடை இல்லாததால் அருகே உள்ள குளவாய்ப்பட்டி கிராமத்திற்கு சென்று பொருட்கள் வாங்க வேண்டியது உள்ளது. இதனால் மலையப்பட்டி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையுடன் கலியப்பட்டி கிராமத்தை இணைக்க வேண்டும்.

இதேபோல் விவசாயிகள் பலர் பேசுகையில் மாவட்டத்தில் போதுமான மழை இல்லாததால் வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கூட்டத்தில் கலெக்டர் கவிதாராமு பேசுகையில், ''மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். விவசாயத்திற்கு தேவையான உரங்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளன'' என்றார். கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, வேளாண்மை இணை இயக்குனர் பெரியசாமி உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story