தஞ்சை அகழிக்கு காவிரி நீர் வந்தது


தஞ்சை அகழிக்கு காவிரி நீர் வந்தது
x

தஞ்சை அகழிக்கு காவிரி நீர் வந்தது

தஞ்சாவூர்

கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்குப்பிறகு தஞ்சையில் உள்ள அகழிக்கு நேற்று காவிரி நீர் வந்தது.

தஞ்சை அகழி

பண்டைய காலத்தில் மன்னர்கள் தங்கள் நாட்டு மக்களை எதிரிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு கோட்டைகளை கட்டினர். அந்த கோட்டைக்குள் எதிரிகள் வராமல் இருப்பதற்காக கோட்டையை சுற்றிலும் அகழிகள் அமைத்தனர். இதில் முதலைகள், பாம்புகள் போன்ற கொடிய விலங்குகள் இருக்கும். இதை தாண்டி கோட்டைக்குள் செல்வது என்பது மிகவும் அரிது ஆகும்.

அந்த வகையில் தஞ்சை பெரியகோவிலை சுற்றிலும் அகழிகள் காணப்படுகிறது. இந்த அகழி தஞ்சை பெரிய கோவிலின் பின்பகுதியில் இருந்து தொடங்கி மேலஅலங்கம், வடக்கு அலங்கம், கீழ அலங்கம் வரை செல்கிறது. இந்த அகழியில் கல்லணைக்கால்வாயில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதும் அகழி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

நீர் மட்டம் குறைந்தது

அவ்வாறு திறந்து விடப்படும் தண்ணீர் அகழியில் நிரம்பி இருக்கும் போது அந்த பகுதிகளில் உள்ள கிணறுகளில் நீர் மட்டம் உயரும். ஆனால் கடந்த ஆண்டு அகழியில் தண்ணீர் குறைந்த அளவே திறக்கப்பட்டது. இதனால் கடந்த 6 மாதங்களாக அகழி தண்ணீர் இன்றி காணப்பட்டது. இதனால் இந்த அகழியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது.

இந்த நிலையில் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் முன்கூட்டியே மே 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணைக்கு 27-ந்தேதி வந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர், காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம் ஆகியஆறுகளில் திறந்து விடப்பட்டது.

15 நாட்களுக்குப்பிறகு......

கல்லணைக்கால்வாயில் பாலப்பணிகள் மற்றும் ஆறு மறுசீரமைப்பு பணிகள் நடந்து வந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை. இந்த நிலையில் தாமதமாக ஜூன் 5-ந்தேதி கல்லணையில் இருந்து கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டது.

கல்லணைக்கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டு 15 நாட்களுக்குப்பிறகு நேற்று அகழி பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரியகோவிலுக்கு பின்பகுதியில் கல்லணைக்கால்வாயில் இருந்து அழிக்கு தண்ணீர் செல்லும் மதகு பகுதியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு தண்ணீர் மேல அலங்கம் பகுதியில் உள்ள அகழிக்கு வந்தது. அகழிக்கு காவிரி நீர் வந்ததையடுத்து அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்


Next Story