கடைமடை சிறுவாய்க்கால்கள் வரை காவிரிநீர் வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும்
கடைமடை சிறு வாய்க்கால்கள் வரை காவிரி நீர் வந்தடைவதை பொதுப்பணி துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்;
கடைமடை சிறு வாய்க்கால்கள் வரை காவிரி நீர் வந்தடைவதை பொதுப்பணி துறையினர் உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கினார். நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் ராஜராஜன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருள்அரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் கலந்துகொண்ட விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதன் விவரம் வருமாறு:-
இயற்கை விவசாயம்
மணியன்: வேதாரண்யம் ஒன்றியத்தில் விவசாயிகள் பாரம்பரிய முறையில் அதிக அளவில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில், மருந்து, ரசாயன உரம் இல்லாமல் சாகுபடி செய்து வருகின்றனர். இயற்கை எரு, பஞ்சகவியா, மீன்அமிலம், பசுந்தாள் உரம் இட்டு மண்ணுக்கும், மக்களுக்கும் எந்தவித கெடுதலும் இல்லாமல் சாகுபடி செய்கின்றனர். அதற்கு விவசாயத்துறை மூலம் சணல் விதை, தக்கை பூண்டு விதை இலவசமாக கிடைக்கவும், மண்புழு உரம் ஒவ்வொரு ஊராட்சியிலும் பாதி விலைக்கு கிடைக்கவும், தாங்கள் இயற்கை விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, இயற்கை விவசாயம் செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும் என்றார்.
ராஜன் வாய்க்கால்
முஜீபுஷரீக்: விவசாயிகளின் நலன் கருதி அரிச்சந்திரா ஆற்றின் குறுக்கே போடப்பட்டுள்ள சட்ரஸ் பலகையை சரி செய்ய வேண்டும். வெள்ள காலங்களில் வீணாக கடலுக்குள் செல்லும் உபரி நீரை காரபிடாகை தெற்கு கிராமத்தில் உள்ள குளத்தில் சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிராம்தோறும் திறக்கப்படாமல் இருக்கும் கால்நடை பட்டிகளை திறக்க வேண்டும். ராஜன் வாயக்காலை முறையாக தூர்வார வேண்டும் என்றார்.
தூர்வாரும் பணிகள்
நாகை மாவட்டத்தில் பொதுப்பணித்துறையால் நடக்கும் தூர்வாரும் பணிகள் சில இடங்களில் முழுமை பெறாமலும், மேலும்சில இடங்களில் பணிகள் தொடங்காமல் உள்ளன. இது குறித்து கணக்கிட்டு தூர்வாரும் பணிகளை முழுமைப்படுத்த வேண்டும்.தமிழ்ச்செல்வன்: நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. பொதுப்பணித்துறை அலுவலர்கள் கடைமடை சிறு வாய்க்கால்கள் வரை காவிரி நீர் வந்தடைவதை உறுதி செய்ய வேண்டும். குறுவை தொகுப்பு இந்தாண்டு 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேளாண் இடுப்பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
காளிதாசன்:-
வேதாரண்யம் முள்ளியாறு, மானங்கொண்டான் ஆறுகளில் மண்டி உள்ள ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும். வேதாரண்யம் பகுதியில் பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். தாணிக்கோட்டகம் பகுதியில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.