கடைமடையை எட்டிப்பார்க்காத காவிரி நீர்


கடைமடையை எட்டிப்பார்க்காத காவிரி நீர்
x
தினத்தந்தி 14 Aug 2023 12:15 AM IST (Updated: 14 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 மாதங்களாகியும் கடைமடையை காவிரி நீர் எட்டிப்பார்க்கவில்லை. இதனால் தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

நாகப்பட்டினம்

வேதாரண்யம்:

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 2 மாதங்களாகியும் கடைமடையை காவிரி நீர் எட்டிப்பார்க்கவில்லை. இதனால் தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

குறுவை சாகுபடி

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் டெல்டா விவசாயிகள் ஆர்வத்துடன் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். கடைமடை மாவட்டமான நாகை மாவட்டத்திலும் குறுவை பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் 2 மாதங்களாகியும் கடைமடை பகுதிகளை எட்டிப்பார்க்கவில்லை.

விவசாயிகள் கண்ணீர்

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள பிராந்தியங்கரை, வடமழை, மணக்காடு, மூலக்கரை, கரியாப்பட்டினம் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி நீர் வரும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் 2,500 ஏக்கரில் குறுவை பயிரிட்டிருந்தனர்.

இந்த நிலையில் தண்ணீரின்றி சாகுபடி செய்த குறுவை பயிர்கள் தற்போது வாட்டி வதைத்து வரும் வெயிலுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கருகி வருவதை பார்த்து விவசாயிகள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

ரூ.30 ஆயிரம் நிவாரணம்

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், 'ஆறுகளில் தண்ணீர் இருந்தால் அதை மோட்டார் வைத்து இறைத்து பயிர்களுக்கு பாய்ச்சுவோம். தற்போது ஆறுகளுக்கு தண்ணீர் வராத நிலையில் 50 முதல் 60 நாட்கள் வரை வளர்ந்த குறுவை பயிர்கள் முற்றிலும் காய்ந்து விட்டன. வயல்கள் வறண்டு வெடித்து காணப்படுகிறது. ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் வரை கடன் வாங்கி பயிரிட்டிருந்தோம். இந்த நிலையில் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி விட்டதால் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆடு, மாடுகளை வயலில் மேய விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்' என்றனர்.


Related Tags :
Next Story