பா.ஜ.க. பிரமுகர்களின் கார், கடைக்கு தீ வைக்கப்பட்ட வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
பா.ஜ.க. பிரமுகர்களின் கார், கடைக்கு தீ வைக்கப்பட்ட வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.
பா.ஜ.க. பிரமுகர்களின் கார், கடைக்கு தீ வைக்கப்பட்ட வழக்குகள் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பா.ஜ.க., இந்து முன்னணி பிரமுகர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு, வாகனங்களுக்கு தீ வைப்பு உள்ளிட்ட சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிவகிரி அருகே முத்தையன்வலசு பகுதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான தட்சிணாமூர்த்தி என்பவருக்கு சொந்தமான பர்னிச்சர் கடை ஈரோடு பூந்துறைரோடு டெலிபோன் நகர் பஸ் நிறுத்தம் அருகில் செயல்பட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி காலையில் அவர் கடையை திறந்து பார்த்தபோது டீசல் கொட்டப்பட்டு கிடந்தது. மேலும், ஜன்னல் வழியாக துணியில் தீ வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காருக்கு தீ வைப்பு
இதேபோல் புஞ்சைபுளியம்பட்டி 2-வது வீதியை சேர்ந்த பா.ஜ.க. பிரமுகரான சிவசேகர் (வயது 50) என்பவர் தனது காரை வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைத்து இருந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 24-ந் தேதி மர்மநபர் ஒருவர் காருக்கு தீ வைத்தார். இதில் கார் எரிந்து சேதமடைந்தது. இதுகுறித்து சிவசேகர் கொடுத்த புகாரின்பேரில் புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
தமிழகம் முழுவதும் இதுபோன்ற வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் நடந்த 2 வழக்குகளும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது.
ஈரோடு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா 2 வழக்குகளுக்கும் முதல் தகவல் அறிக்கையை நேற்று முன்தினம் பதிவு செய்தார்.
இதைத்தொடர்ந்து சிறப்பு விசாரணை அதிகாரி தமிழ்செல்வி இந்த வழக்குகள் தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளார்.