கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: ஆத்தூர் நகரசபை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை-புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில்வேகத்தடை இருந்ததா? என ஆய்வு
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக ஆத்தூர் நகரசபை அலுவலகத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை இருந்ததா? என்பது குறித்து போலீசார் ஆய்வு நடத்தினர்.
ஆத்தூர்:
ஜெயலலிதாவின் கார் டிரைவர்
முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் கார் டிரைவர் எடப்பாடியை சேர்ந்த கனகராஜ், ஆத்தூர் அருகே புறவழிச் சாலையில் மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக ஆத்தூர் போலீசார் விபத்து வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தற்போது சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உள்ளது. எனவே கனகராஜ் இறந்தது எப்படி? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
சி.பி.சி.ஐ.டி. போலீசார்
இந்தநிலையில் ஆத்தூர் நகரசபை அலுவலகத்திற்கு நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு இன்ஸ்பெக்டர் சந்தோஷ் குமார் தலைமையிலான போலீசார் வந்தனர். அவர்கள், நகரசபை அலுவலகத்தில் இருந்த என்ஜினீயர் மலர்க்கொடியிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது கனகராஜ் இறந்ததாக கூறப்பட்ட முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்ததா?. எதற்காக புறவழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் வேகத்தடை அமைக்கப்பட்டது. வேகத்தடை தொடர்பான ஆவணங்கள் நகரசபை அலுவலகத்தில் உள்ளதா? என்பது குறித்து அங்குள்ள ஆவணங்களை ஆய்வு செய்தனர். பின்னர் அதற்கான நகலை சி.பி.சி.ஐ.டி. போலீசார் எடுத்து சென்றனர்.