சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு
கோடநாடு எஸ்டேட் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோத்தகிரி
கோடநாடு எஸ்டேட் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
கோடநாடு வழக்கு
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் உள்ளது. இங்கு கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காவலாளி கொலை செய்யப்பட்டதோடு, பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சயான், வாளையாறு மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, ஊட்டி கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் வழக்கை தீர விசாரித்து உண்மையை வெளியே கொண்டுவர மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. பின்னர் 230-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
இதையடுத்து திடீரென கடந்த மாத இறுதியில் வழக்கு விசாரணையை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார். அதன்பின்னர் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரிக்க தொடங்கினர்.
இந்த நிலையில் நேற்று மாலை 4 மணிக்கு சி.பி.சி.ஐ.டி. துணை சூப்பிரண்டு சந்திரசேகர், கூடுதல் துணை சூப்பிரண்டு முருகவேல் ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் 3 ஜீப்களில் கோத்தகிரி வந்தனர். பின்னர் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகனை அழைத்துக்கொண்டு கோடநாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று திடீர் ஆய்வு செய்தனர்.
ஆனால் எஸ்டேட்டுக்குள் செல்லவோ, அங்கு யாரிடமும் விசாரணை நடத்தவோ இல்லை என்று கூறப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் ஆகிவிட்டதால், எஸ்டேட் பணியாளர்கள் வேலை முடிந்து சென்றுவிட்டனர். இதனால் நுழைவு வாயில்கள் பூட்டப்பட்டு இருந்ததாக தெரிகிறது. அதன்பின்னர் இரவு 7.30 மணிக்கு கோத்தகிரியில் இருந்து சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் திரும்பி சென்றனர்.