ஜவுளி வியாபாரி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை
மணப்பாறை ஜவுளி வியாபாரி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மணப்பாறை:
சி.பி.ஐ. சோதனை
திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள பூமாலைபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 44). பட்டதாரியான இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். தற்போது ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்களை வெளிநாடுகளுக்கு அனுப்பியதாக இன்டர்போல் அதிகாரிகள் சி.பி.ஐ.க்கு தகவல் கொடுத்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அவரது வீட்டிற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 6 பேர், மணப்பாறை போலீசார் உதவியுடன் சென்று அதிரடி சோதனை நடத்தினர்.
13 மணி நேரம்
பின்னர் வீட்டில் இருந்த ராஜாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும் ராஜா வெளிநாடுகளுக்கு அனுப்பிய சிறுமிகளின் ஆபாச படங்கள், வீடியோக்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன? எதற்காக அவற்றை வெளிநாடுகளுக்கு அனுப்பினார்? அந்த படங்கள், வீடியோக்களை அனுப்பியதன் மூலம் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்றுள்ளாரா? என்பது குறித்து அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர்.
காலை 7 மணியளவில் தொடங்கிய இந்த சோதனை மற்றும் விசாரணை சுமார் 13 மணி நேரம் அதாவது இரவு 8 மணி வரை நடந்தது. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவம் மணப்பாறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியிலும் விசாரணை
இதற்கிடையே டெல்லியிலும் நேற்று இதைப்போன்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதுவும் இன்டர்போல் கொடுத்த தகவலின் பேரில் நடந்ததாக சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.