சி.பி.ஐ. சோதனை


சி.பி.ஐ. சோதனை
x

பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. சோதனை நேற்றும் நீடித்தது.

விருதுநகர்


தாயில்பட்டி,


விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. சோதனை நேற்றும் நீடித்தது.


சி.பி.ஐ. சோதனை


விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை நேற்று 3-வது நாளாக நீடித்தது.


குறிப்பாக வெற்றிலையூரணி, சல்வார்பட்டி, சூரார்பட்டி, ஏழாயிரம்பண்ணை உள்ளிட்ட ஊர்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் மட்டுமின்றி, சிவகாசி வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரி உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் திடீரென சோதனை நடத்தினர். பட்டாசு ஆலைகளின் ஒவ்வொரு அறையாக சென்று என்னென்ன பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன, பட்டாசுகளில் எந்த வகை ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன? என்பது குறித்து சோதனை நடத்தினர்.


சரவெடிகள் தயாரிப்பா?


தடை செய்யப்பட்ட சர வெடிகள் தயாரிக்கப்படுகிறதா? ரசாயன அறையில் பேரியம் நைட்ரேட் பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும் ஆய்வு செய்தனர். 2 மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடந்தது. அப்போது பட்டாசு மாதிரிகள், மருந்து கலவை மாதிரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்தனர்.


இதுகுறித்து சி.பி.ஐ. அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-


தாயில்பட்டி மற்றும் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு ஆலைகளில் நாளையும்(அதாவது இன்று) தொடர் ஆய்வு செய்யப்படும். தற்போது சோதனை செய்த பட்டாசு ஆலைகளில் முன்கூட்டியே வருவோம் என தெரிந்து பட்டாசு பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர். இது மகிழ்ச்சிதான். ஆனால் எப்போதும் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்த பட்டாசுகளை மட்டுமே தயாரிக்க வேண்டும். தடையுள்ள பட்டாசுகளை தயாரிக்கும் ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


இவ்வாறு அவர்கள் கூறினர்.


சாத்தூர்


அதே போல சாத்தூர் அருகே உள்ள கீழஒட்டம்பட்டி, மேலஒட்டம்பட்டி, சின்னகாமன்பட்டி, மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 40-க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. மேலப்புதூர், ஸ்ரீரங்காபுரம், சிந்தப்பள்ளி, அம்மாபட்டி, அப்பைய நாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழு நேற்று திடீரென சோதனை நடத்தினர். அனைத்து பட்டாசு ஆலைகளில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை பின்பற்ற வேண்டும். முறைகேட்டில் ஈடுபடும் பட்டாசு ஆலைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு ஆலைகளில் அதிகமாக முறை இருப்பின் பட்டாசு கடை உரிமம் ரத்து செய்யப்படும் என்றும், பேரியம்நைட்ரேட் பயன்படுத்தி சரவெடிகள் தயாரிக்கப்படுவது தவிர்க்க வேண்டும் என்றும் எச்சரிக்கை செய்தனர். சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு நடத்துவது தெரிந்த சில பட்டாசு ஆலைகள் விடுமுறை விடப்பட்டு பட்டாசு தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.Next Story