கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடுங்கள் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்


கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கையுடன் புத்தாண்டை கொண்டாடுங்கள் - போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தல்
x

கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை கடைபிடித்து புத்தாண்டை கொண்டாடுங்கள் என்று மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்களின் நிர்வாக மேலாளர்களை அழைத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் அறிவுறுத்தினார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது ஓட்டல்கள், விடுதிகள், கடற்கரை பண்ணை வீடுகள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அவற்றின் நிர்வாக மேலாளர்கள், இயக்குனர்கள், உரிமையாளர்களை அழைத்து மாமல்லபுரம் தனியார் ஓட்டல் ஒன்றில் மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன் தலைமையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் முன்னிலையில் போலீசார் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது இந்த கூட்டத்தில் புத்தாண்டு பிறப்பு நள்ளிரவு அன்று ஓட்டல் நிர்வாகத்தினர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் விளக்கி கூறினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

சீனாவில் உருமாறிய கொரோனாவாக பி.எப்.7 என்ற பெயரில் மீண்டும் புதிய வைரஸ் தொற்று பரவிவருகிறது. இந்த வைரஸ் அதிதீவிரமாக பரவும் தன்மை கொண்டதால் இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மாமல்லபுரத்தில் உள்ள ஓட்டல்களுக்கு வரும் விருந்தினர்களுக்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி அவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளார்களா? என்பதை அந்தந்த நட்சத்திர விடுதி நிர்வாகத்தினர் பரிசோதிக்க வேண்டும். அதேபோல் முக கவசம் அணிந்து வருகிறார்களா என்பதை கண்காணிக்க வேண்டும். கஞ்சா, அபின் பொன்ற போதை பொருட்களை கொண்டு வரும் பயணிகளை அனுமதிக்க கூடாது.

மாமல்லபுரம் முதல் முட்டுக்காடு வரை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 400 கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் போலீசார் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். வரும் 31-ந்தேதி மாலை 6 மணி முதல் கோவளம் சோதனை சாவடியில் அருகில் மடக்கப்பட்டு இரு சக்கர வாகனங்களில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வரும் வாலிபர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்கள் மாமல்லபுரம் செல்ல அனுமதி கிடையாது.

குடும்பத்துடன் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் மாமல்லபுரம் செல்ல வழக்கம்போல் அனுமதிக்கப்படுவார்கள். குறிப்பாக ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் வரவேற்பு அறையில் உள்ள கண்காணிப்பு கேமரா கண்டிப்பாக இயங்க வேண்டும். அறை எடுத்து கேளிக்கை கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களிடம் ஆதார் அட்டை, தேர்தல் வாக்காளர் அட்டை உள்ளிட்ட ஏதாவது ஒரு அடையாள அட்டை பெற்றுக்கொண்டே ஓட்டல் நிர்வாகங்கள் அறைகள் ஒதுக்கி தரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கூட்டத்தில் கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், மாமல்லபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கேளிக்கை விடுதி உரிமையாளர்கள், இயக்குனர்கள், மேலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story