சர்வதேச யோகா தின கொண்டாட்டம்


சர்வதேச யோகா தின கொண்டாட்டம்
x

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்

சர்வதேச யோகா தினம்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் சார்பில் 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் மாண்பமை வேந்தர் சீனிவாசன் தலைமை வகித்து, மாணவர்களுடன் யோகா பயிற்சியில் கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த சிறப்பு வாய்ந்த யோகா தின விழாவில் கலந்துகொண்டு மாணவர்களுடன் சேர்ந்து யோகா பயிற்சியில் ஈடுபடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த யோகா பயிற்சி என்பது நம் முன்னோர்கள் உலக மக்களுக்காக, கொடுத்த பெருங்கொடை. யோகாப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதால் நம் உடல் வலுவடைகிறது.

மேலும் உள்ளம் தூய்மையடைகிறது. "நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்" என்பது நமக்கு நன்றாக தெரியும். நம்முடைய உடல் மற்றும் உறுப்புகள் மட்டும் பலகோடிகளுக்கு சமம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே, எனவே, நாம் அனைவருமே கோடீஸ்வரர்கள் என்பதை மனதில் வைத்து நம் உடலையும், உள்ளத்தையும் பேணிகாக்க வேண்டும். "இங்கு எதுவும் நிரந்தரம் என்று இல்லை". பதவி, பணம், புகழ், அதிகாரம் இவை அனைத்தும் காலத்திற்கு ஏற்ப மாறுதலுக்கு உட்பட்டவைதான் என்ற இயற்கை நியதியை மாணவர்களாகிய நீங்கள் இளம் வயதிலேயே புரிந்துகொள்ள வேண்டும்.

வாழ்வதற்கு பொருள் வேண்டும்

எனவே வாழ்க்கையை அமைதியுடனும், நிதானத்துடனும் எந்தவித பயமும், பதட்டமும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ பழகிக்கொள்ளவேண்டும். இதற்கு யோகா பெரிதும் உதவும் என்றார். "வாழ்வதற்கு பொருள் வேண்டும், நாம் வாழ்வதிலும் பொருள் வேண்டும்" என்று கூறிய அவர் நம்முடைய வாழ்க்கையை பூக்கள் பூத்துக்குலுங்கும் நந்தவனமாக மாற்றிக்கொள்வதும், வறண்ட சுடு பாலைவனமாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய எண்ணங்களில்தான் உள்ளது, அதனால்தான் "எண்ணம் போல வாழ்வு" என்று சொல்வார்கள்.

எனவே போட்டி, பொறாமை, ஆணவம், சுயபெருமை போன்ற தீய பழக்கங்களை தீயிட்டு கொளுத்தவேண்டும். மாறாக அன்பு, பாசம், ஈகை, கருணை போன்ற நல்ல பழக்கங்களை நாள்தோறும் வளர்த்து அதை பன்மடங்காய் பெருக்கி நல்ல மனிதர்களாக மகிழ்ச்சியுடன் வாழவேண்டும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் செயலர் நீலராஜ் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர் மணி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

யோகா கலை

இந்த விழாவில் அரியலூர் யோகா கலைக்கூடத்தின் பயிற்றுனர் கிருஷ்ணகுமார் கலந்துகொண்டு தியானம், விரிச்சாசனம், திரிக்கோனாசனம், பத்மாசனம், பத்மா பர்வதாசனம், யோகமுத்ரா வஜ்ராசனம், வீராசனம், மகா முத்ராயோகா போன்ற யோகா கலையை மாணவர்களுக்கு பயிற்றுவித்தார். விழாவிற்கு தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் உமாதேவி பொங்கியா வரவேற்புரை ஆற்றினார்.

முடிவில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இளங்கோவன் நன்றியுரை ஆற்றினார். இந்நிகழ்வில் தனலட்சுமி சீனிவாசன் கல்விக்குழுமத்தின் கல்விநிறுவங்களின் முதல்வர்கள், துணை முதல்வர்கள், புலமுதல்வர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் 1,000-க்கும் மேற்ப்பட்ட மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.


Next Story