கோவில்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்


தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

கோவில்பட்டியில்கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

தியான மடம்

கோவில்பட்டி கிருஷ்ணா நகர், ஹவுசிங் போர்டு, பிருந்தாவனம் தியான மடத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், காலை 8 மணிக்கு சிறப்பு பஜனை, 10 மணிக்கு சிறுவர்- சிறுமிகள் ராதை, கிருஷ்ணர் வேடமணிந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கலை நிகழ்ச்சி நடத்திய சிறுவர், சிறுமிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியையும் தொடங்கி வைத்தார். விழாவில் விழா கமிட்டியினர் மற்றும் அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், தூத்துக்குடி மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து தலைவர் சத்யா, ஆவின் பால் உற்பத்தியாளர் சங்க தலைவர் தாமோதரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

விஷ்வஇந்து பரிஷத்

கோவில்பட்டி விஷ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. கிருஷ்ணன் கோவில் முன்பிருந்து அலங்கரித்து வைக்கப்பட்ட கிருஷ்ணர், ராதை தேரில் வைக்கப்பட்டு, மேளதாளம் முழங்க புறப்பட்டு மெயின் ரோடு, புது கிராமம், ஜோதி நகர், பசுவந்தனை ரோடு, வீரவாஞ்சி நகர், கிருஷ்ணா நகர், அத்தை கொண்டான், இந்திரா நகர், காந்தி நகர், நடராஜபுரம் தெரு, வழியாக சுந்தரராஜ கோவில் பெருமாள் கோவில் முன்பு நிறைவடைந்தது.

நிகழ்ச்சிக்கு விசுவ இந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் ஏ. வி. மாரிமுத்து தலைமை தாங்கினார். மாநில தலைவர் கதிர்வேல், பாஜக விருந்தோம்பல் பிரிவு மாவட்ட தலைவர் வினோத்குமார், ஒன்றிய தலைவர் மாடசாமி, இந்து ஆலய பாதுகாப்பு இயக்கம் மாவட்ட தலைவர் பரமசிவம், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவில்பட்டி சுற்றுவட்டார பகுதியிலுள்ள பல கிராமங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.


Next Story