பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
பள்ளிகளில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
நாடு முழுவதும் இன்று (புதன்கிழமை) கிருஷ்ண ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இன்று அரசு விடுமுறை என்பதால் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மழலை, தொடக்க பள்ளிகளில் நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி பள்ளி மாணவ-மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். அவர்கள் கிருஷ்ண ஜெயந்தி விழா குறித்து பேசியும், கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்த மாணவ-மாணவிகள் நடனமாடினர். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெரம்பலூரில் பிரசித்தி பெற்ற மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் உள்ள நவநீத கிருஷ்ணருக்கு மதியம் சிறப்பு வழிபாடு நடைபெறவுள்ளது. இதையடுத்து இரவு 7 மணியளவில் பெரம்பலூர் எடத்தெருவில் உள்ள ராஜகோபால சுவாமி பஜனை மடத்தில் சிறப்பு பூஜையும், சந்தான கிருஷ்ணர் தொட்டில் சேவையும் நடைபெறவுள்ளது. மேலும் குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து வந்து கிருஷ்ணரை வழிபடவுள்ளனர். நாளை (வியாழக்கிழமை) காலையில் மதனகோபாலசுவாமி கோவிலில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து பல்லக்கில் எடத்தெரு கிருஷ்ணர் கோவிலுக்கு வந்தடைவார். மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நான்கு இடங்களில் உறியடி நிகழ்ச்சி நடக்கிறது.