உலக தாய்ப்பால் வார விழா


உலக தாய்ப்பால் வார விழா
x

நாமக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா கலெக்டர் உமா தலைமையில் நடைபெற்றது.

நாமக்கல்

தாய்ப்பால் வார விழா

நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சி "தாய்ப்பால் ஊட்டலை சாத்தியமாக்குவோம், பணி புரியும் பெற்றோரின் வாழ்வில் மாறுதலை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் நடந்தது. மாவட்ட கலெக்டர் உமா தலைமை தாங்கினார். பெ.ராமலிங்கம் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இணை பேராசிரியர் சுரேஷ் கண்ணன் வரவேற்றார்.

அதன் பிறகு தாய்ப்பால் தானம் வழங்கிய தாய்மார்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், பிரசவித்த தாய்மார்களுக்கு குழந்தை நல பெட்டகங்களையும் கலெக்டர் உமா, ராமலிங்கம் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்த அருள்மொழி, மருத்துவ கண்காணிப்பாளர் குணசேகரன், நிலைய மருத்துவ அலுவலர் கண்ணப்பன், குழந்தைகள் நல மருத்துவர் மகாலட்சுமி மற்றும் தாய்மார்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

தேவையான ஊட்டச்சத்துக்கள்

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் உமா பேசியதாவது:-

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் தேவையான ஊட்டச்சத்துக்கள் தாய்ப்பாலில் மட்டுமே சரி விகிதத்தில் உள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுப்பதால், அவர்கள் கூர்ந்த அறிவுத்திறன் உடையவர்களாக திகழ்வார்கள். மேலும் பிற்காலத்தில் உடல் பருமன், சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பாதிப்புகள் வருவதை தடுக்கிறது.

அதேபோல் தாய்ப்பால் புகட்டுவதால் தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு பின்வரும் ரத்த கசிவு ஆபத்து குறைகிறது. தாய்மார்களின் உடல் நலத்துக்கும் மிகவும் நல்லது.

இவ்வாறு கலெக்டர் உமா பேசினார்.


Next Story