உலக செவிலியர் தின கொண்டாட்டம்


உலக செவிலியர் தின கொண்டாட்டம்
x

உலக செவிலியர் தின கொண்டாட்டம் நடந்தது.

பெரம்பலூர்

மக்கள் நல்வாழ்வுக்காக இரவு, பகல், பண்டிகை நாட்கள் பாராமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் செவிலியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இங்கிலாந்தில் செல்வ குடும்பத்தில் பிறந்து செவிலியராக சேவையாற்றி மறைந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்த நாளான மே 12-ந்தேதி ஆண்டுதோறும் உலக செவிலியர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பெரம்பலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக செவிலியர் தினம் நர்சுகளால் கொண்டாடப்பட்டது. முன்னதாக பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர்தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் அர்ச்சுனன் தலைமை தாங்கினார். இருக்கை மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், மருந்தாளுனர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் செவிலியர்கள் கண்காணிப்பாளர் நிலை-2 சீதாலட்சுமி தலைமையில் நர்சுகள் கேக் வெட்டி உலக செவிலியர் தினத்தை கொண்டாடினர். இதையடுத்து மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், ஊழியர்கள், பணியாளர்கள், நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்களுக்கு நர்சுகள் இனிப்பு கொடுத்தனர். அவர்கள் நர்சுகளுக்கு, செவிலியர் தின வாழ்த்துகளை தெரிவித்தனர். மேலும் நர்சுகள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உலக செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.


Next Story