நீலகிரியில் யோகா தின கொண்டாட்டம்
நீலகிரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகாசனங்களை செய்து அசத்தினர்.
ஊட்டி
நீலகிரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் யோகாசனங்களை செய்து அசத்தினர்.
யோகா தினம்
ஆண்டுதோறும் ஜூன் மாதம் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு அலுவலகங்கள் உள்பட பல இடங்களில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி அருகே நஞ்சநாடு அரசு மேல்நிலை பள்ளியில் நேற்று யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதில் நஞ்சநாடு, எடக்காடு அரசு பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு யோகாசனங்களை செய்து அசத்தினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் துரை செய்திருந்தார். இதில் என்.சி.சி. அலுவலர்கள் காமராஜ், சுப்பிரமணியன், அவில்தார் பாட்ஷா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
உடல் ஆரோக்கியம்
ஊட்டியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவ- மாணவிகள் யோகாசனங்களை செய்தனர். மேலும் நடனமாடி யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதேபோல் ஊட்டி கோர்ட்டில் யோகா தின விழா நடந்தது. இதற்கு மாவட்ட நீதிபதி அப்துல் காதர் தலைமை தாங்கினார். நீதிபதிகள் லிங்கம், ஸ்ரீதர், மோகனகிருஷ்ணன் தமிழினியன் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ராணுவ வீரர்கள்
குன்னூர் அருகே வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்டல் மையத்தில் (எம்.ஆர்.சி.) 9-வது சர்வதேச யோகா தின விழா ஸ்ரீநாகேஷ் பேரக்ஸ், தங்கராஜ் மைதானம் ஆகியவற்றில் நடத்தப்பட்டது. விழாவில் வெலிங்டன் கன்டோன்மென்ட்டின் அக்னி வீரர்கள், சிவிலியன் பாதுகாப்பு ஊழியர்கள் உள்பட 1,500 ராணுவ வீரர்கள் யோகாசனங்களை செய்து பயிற்சி மேற்கொண்டனர்.
எம்.ஆர்.சி. யோகா பயிற்றுனர்கள் நம் சமூகத்தில் நிலவும் உடல் பருமன், அதிக கொழுப்பு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை தடுப்பதற்காக யோகா பயிற்சிகளின் நன்மைகள் குறித்து விளக்கினர். யோகாவின் முக்கியத்துவம் குறித்து எம்.ஆர்.சி. கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பேசும் போது, ராணுவத்தில் நீண்ட காலமாக யோகா பயிற்சி செய்யப்பட்டு வருகிறது. இது ஏற்கனவே உடல் தகுதி பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது என்றார்.
என்.சி.சி. மாணவிகள்
எடப்பள்ளி, உபதலை அரசு மேல்நிலை பள்ளிகள், வண்டிசோலை அரசு நடுநிலை பள்ளி மாணவர்கள் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி குன்னூரில் நடைபெற்றது. என்.சி.சி. இணை அலுவலர் லெப்டினெட் சிந்தியா ஜார்ஜ் மாணவர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறினார். தேசிய மாணவர் படை மாணவிகள் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு யோகாசனங்களை செய்து காட்டினர்.
கூடலூர்
கூடலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. சார்பு நீதிபதி முகமது அன்சாரி, குற்றவியல் நீதித்துறை நடுவர் சசின்குமார், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் யோகா பயிற்சிகளை செய்தனர். கூடலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி நடைபெற்றது. திட்ட அலுவலர் அர்ஜுனன் தலைமையில், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
கூடலூர் காபி வாரியம் சார்பில், அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் முதுநிலை தொடர்பு அலுவலர் ஜெயராமன், உதவி விரிவாக்க அலுவலர்கள் ராமஜெயம் (கூடலூர்), நித்தியா(குன்னூர்), விரிவாக்க ஆய்வாளர் சீனா மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொண்டனர்.