திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவம் இன்று நடக்கிறது


தினத்தந்தி 6 March 2023 6:45 PM GMT (Updated: 6 March 2023 6:45 PM GMT)

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் இன்று இரவு மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

சிவகங்கை

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் இன்று இரவு மாசி மக தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.

சவுமிய நாராயண பெருமாள்

திருப்பத்தூர் அருகே திருக்கோஷ்டியூரில் உள்ள சவுமிய நாராயணப்பெருமாள் கோவிலில் மாசி மக தெப்ப உற்சவத்திருவிழா கடந்த மாதம் 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் சாமி புறப்பாடு நடைபெற்றது.

திருவிழாவையொட்டி நேற்று காலையில் வெண்ணைத்தாழி சேவையில் பெருமாள் திருவீதி புறப்பாடும், தொடர்ந்து தெப்பம் முட்டுத்தள்ளுதலும் நடைபெற்றது. இரவு பெருமாள் தங்க பல்லக்கில் திருவீதி புறப்பாடு நடந்தது.

தெப்ப உற்சவம்

10-ம் திருநாளான இன்று காலை பெருமாள் தங்கத்தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடும், பகல் தெப்பம் சுற்றுதலும், இரவு 7.35 மணிக்கு பெருமாள் ஸ்ரீதேவி, பூ தேவியருடன் மின்ஒளியால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறும்.

11-ம் திருநாளான நாளை காலையில் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இரவு பெருமாள் தங்கத்தோளுகினியானில் ஆஸ்தானத்திற்கு எழுந்தருளுல் நடைபெறும்.

800 போலீசார் குவிப்பு

தெப்ப உற்சவத்திற்காக சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை சூப்பிரண்டுகள் உள்பட 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். திருப்பத்தூர் தீயணைப்புத்துறை வீரர்களும், சுகாதாரத்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.


Next Story