உலகம் முழுவதும் இன்று கொண்டாட்டம்:காதல் வேண்டும்; காதலர் தினம் வேண்டுமா?-காதல் ஆர்வலர்கள் கருத்து


உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. காதல் வேண்டும், காதலர் தினம் வேண்டுமா? என்பது குறித்து காதல் ஆர்வலர்கள் கூறிய கருத்துக்களை காண்போம்.

சேலம்

''காதல்'' இந்த ஒற்றைச் சொல் உருவாக்கிய காவியங்களும், காப்பியங்களும் உலகில் ஏராளம். காதல் பூக்களை மட்டுமல்ல, பல்வேறு போர்க்களங்களையும் கண்டுள்ளது. வயது வித்தியாசம் இல்லை, மொழியும், இனமும், மதமும் இதற்கு தடை இல்லை. தூரங்கள் இதற்கு துளியும் தடையுமில்லை. கூடு விட்டு கூடு பாயும் மாய வித்தை போல், கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்தி இந்த காதலுக்கு உண்டு.

ஒருவரையொருவர் நேரில் பார்க்காமல் உணர்வுகளால் காதலித்த பல சம்பவங்களை பல்வேறு காப்பியங்களில் படித்துள்ளோம். ஆனால் இன்று அதுவும் சாத்தியம் என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துக் கொண்டுதான் உள்ளது. எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும் காதல் ஒன்றே உணர்வு பூர்வமாக மாறாததாக இருந்து வருகிறது. உலகம் காணும் ஒற்றை மதம் காதல். மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த ஜீவராசிகளுக்கும் பொதுவானது காதல். இத்தனை சிறப்புமிக்க காதலைத் தீண்டாமல் தம் வாழ்வைத் தாண்டியோர் சொற்பமே!

காதலர் தினம்

ஆண்டு தோறும் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினம் (வாலன்டைன்ஸ் டே) கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக பல்வேறு காரணங்கள் கதைகளாக கூறப்படுகிறது. கி.பி.270-ம் ஆண்டு ரோமாபுரி பேரரசர் தமது நாட்டு படைவீரர்கள் திருமணம் செய்யக் கூடாது என கட்டளையிட்டார். ஆனால் 'வாலன்டைன்' என்ற பாதிரியார் அரசருக்கு தெரியாமல் காதலிக்கும் படை வீரர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். இதனால் கோபமடைந்த அரசர் பாதிரியார் வாலன்டைனுக்கு மரண தண்டனை விதித்து சிறையில் அடைத்தார்.

சிறையில் இருந்து போது சிறை அதிகாரியின் பார்வையற்ற மகள் அஸ்டோரியஸ் என்பவருக்கும் வாலன்டைனுக்கும் காதல் ஏற்பட்டது. இதையறிந்த அவரது தந்தை அஸ்டோரியசை வீட்டுக் காவலில் வைத்தார். பிறகு வாலன்டைனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அவர் அஸ்டோரியசுக்கு எழுதிய கடிதம் தூதுவர்கள் மூலம் கிடைத்த போது வாலன்டைன் இறந்து விட்டார். அவர் மரணித்த பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

சமீப காலமாக உலகம் முழுவதும் காதலர் தினம் திருவிழா போல் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக காதலர் தினம் அனைத்துப் பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது.

கலாசாரம்

தமிழர் வாழ்விலும், கலாசாரத்திலும் காதல் என்பது புதிது அல்ல. தமிழர்கள் தொன்மைக் காலம் தொட்டே கலையிலும், கலாசாரத்திலும், காதலிலும், வீரத்திலும் சிறந்து விளங்கி உள்ளனர். தமிழர்களின் பல்வேறு காப்பியங்களில் காதலுக்கு கொடுத்துள்ள முக்கியத்துவமே இதற்குச் சான்று. சங்க காலப் பாடல்களில் காதலும், கலப்பு மணமும், காந்தர்வ திருமணங்களும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. சங்க காலம் முடிந்து, நவீன காலம் தொடங்கிய பிறகே காதலின் பரிணாமமும் மாறத் தொடங்கியது.

சீரழிவு

கருப்பு -வெள்ளை சினிமா காலங்களில் காதல் என்பது மிகவும் புனிதமானதாகவே காட்டப்படும். சினிமாவில் கூட நாயகனும், நாயகியும் தொட்டுப் பேசுவதோ, கட்டிப் பிடித்து ஆடுவதோ தவிர்க்கப்பட்டது. காரணம், காதல் என்ற வார்த்தையே அப்போது கலாசார சீரழிவாக பார்க்கப்பட்டது. அந்தக் காலங்களில் அரசர்கள் வாழ்வியலும், புராணங்களும் மட்டுமே திரைப்படமாக உருவாக்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து வண்ணப்படங்கள் உருவான காலத்தில் கூட காதலை மிகவும் மென்மையாகவும், உணர்வு பூர்வமானதாகவும் மட்டுமே திரை உருவாக்கம் செய்யப்பட்டது. 1950 முதல் 1970 கால கட்டங்கள் வரை திரைப்படங்களுக்கும், மேடை நாடகங்களுக்கும் காதல் என்ற வார்த்தை கொண்ட பெயர் கூட சூட்டப்படாத நிலைதான் இருந்தது. அப்போதெல்லாம் குடும்ப படங்கள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. காரணம், சமூகத்தில் காதல் என்பது கலாசார சீரழிவாக மட்டுமே பார்க்கப்பட்டு வந்தது. சமூகத்தின் பார்வைதான் சினிமாவிலும் எதிரொலித்தது.

கொடி கட்டியது

பட்டிதொட்டியெங்கும் காதல் 1980-க்கு பிறகு சினிமாக்களில் காதல் கொடி கட்டி பறக்கத் தொடங்கியது. குறிப்பாக, திரைப்பட பாடல்களில் காதலுக்கான முக்கியத்துவம் தலைதூக்கியது. சமூகத்தில் எழுந்த மாற்றமும், காதலின் தாக்கமும் தான் சினிமாவில் எதிரொலிக்க தொடங்கியதாக இயக்குனர்கள் தெரிவித்தனர். அதே வேளையில் சினிமாவில் காட்டப்பட்ட காதல் காட்சிகளும், பாடல்களின் வரிகளும் தான் இளைஞர்களிடையே காதல் மோகத்தை உருவாக்கியது என்பது சமூக ஆர்வலர்களின் குற்றச்சாட்டு. எது எப்படியோ பள்ளி தொடங்கி கல்லூரி மாணவர்கள் வரை காதலிப்பது என்பது கட்டாயம் என்ற அளவிற்கு காதல் பரவ தொடங்கியது. இருப்பினும் அந்த காலக்கட்டத்தில் காதலிப்பவர்கள் சந்திப்பதும், பழகுவதும் மிகவும் அபூர்வமாகவே இருந்தது.

கருப்பு- வெள்ளை திரைப்படங்களில் ''நாதா'' என்று நாயகி அழைக்க 10 அடி தூரத்திற்கு அப்பால் நிற்கும் நாயகன் ''கண்ணே'' என்று விழித்து காதல் பாட்டு பாடுவார். சமூகத்திலும் காதலர்கள் அந்த நிலையில் தான் இருந்தனர். ஒருவரையொருவர் பார்ப்பதும், பழகுவதும், பேசுவதும் மிகவும் அரிதான சம்பவமாகவே இருந்தது.

அதன்பிறகு கலர் படங்களில் மலர்கள் ஒன்றோடொன்று உரசிக் கொள்வது போல் காண்பிப்பார்கள். அதன்படி காதலும் மெல்ல மெல்ல அடுத்த கட்டத்தை நோக்கி நகரத் தொடங்கியது. காதலர்கள் கல்லூரிகளிலும், பூங்காக்களிலும், கோவில்களிலும் சந்தித்து தங்கள் காதலை தைரியமாக வெளிப்படுத்த தொடங்கினார்கள். இருப்பினும் கடிதங்கள் மட்டுமே அவர்களுக்கு தகவல் தொடர்பு கருவியாக இருந்தது. எழுதிய கடிதங்களை கொடுக்க தைரியமில்லாமலும், துளிர்த்த காதலை வெளிப்படுத்த துணிச்சல் இல்லாமலும் எத்தனையோ காதல்கள் மடிந்து போன வரலாறும் உண்டு.

செல்போன் காலம்

இன்றைய நவீன காலத்தில் குறிப்பாக ''2 கே கிட்ஸ்'' என்று அழைக்கப்படும் 2000-க்கு பிறகு காதலும் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது. உலகமயமாக்கலுக்கு பிறகு ஆண்டு தோறும் காதலர் தினம் கூட மிகப்பெரிய வணிகத்திருவிழாவாக உருவெடுத்துள்ளது. பிப்ரவரி 14-ந் தேதியை மையமாக வைத்து பல்வேறு வணிகம் கட்டியமைக்கப்படுகிறது. ரோஜா மலர்களின் ஏற்றுமதியும், பூங்கொத்து, வாழ்த்து அட்டை, சாக்லெட், கேக்குகள் என காதலர்கள் பரிமாறிக் கொள்ளும் பொருட்களின் ஏற்றுமதியும், இறக்குமதியும் பல கோடியைத் தாண்டுகிறது. இயற்கையாக நிகழும் காதல் என்ற உணர்வு இன்று வியாபாரத்திற்காக செயற்கையாக கட்டமைக்கப்படுகிறதோ என்ற எண்ணம் பல்வேறு தரப்பிலும் உருவாகிஉள்ளது. நவீன அறிவியல் மாற்றங்களால் செல்போன், இண்டர்நெட் வளர்ச்சியால் காதலும் புதுப்புது அவதாரம் எடுத்துள்ளது என்பதே நிஜமாகும். அப்போதெல்லாம் காதலைச் சொல்லவே பல ஆண்டுகள் காத்திருப்பார்கள். சொல்லாத காதலும், எத்தனை எத்தனையோ. ஆனால் இப்போதுள்ள வாட்ஸ்-அப், டுவிட்டர் உலகில் காதலை வெளிப்படுத்துவது என்பது மிகவும் எளிதாகி விட்டது. அனுப்பிய தகவலில் ஊதா நிற டிக் வந்துவிட்டதா? என்பது மட்டுமே இன்றைய இளம் தலைமுறையினர் காதலுக்காக காத்திருக்கும் காலம்.

குறுகியகால சாகுபடி

அதேபோல் காதலியோ அல்லது காதலனோ நிராகரிப்பிற்காக வருத்தப்பட்டதெல்லாம் போன தலைமுறை. இப்போதெல்லாம் காதல் என்பதே குறுகிய கால சாகுபடி போல் மாறிவிட்டது. அறுவடை முடிந்து விட்டால் அடுத்த பட்டத்திற்கு தயாராவது போல் ''டேட்டிங்'' பிரேக்கிங்'' என காதலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி உள்ளனர்.

''மாமாக் குட்டி''

இன்றைய இண்டர்நெட் காலத்தில் காதலை பாரமாக தூக்கி சுமப்பதை தவிர்த்து விட்டோம் என்கிறார்கள் இளைய தலைமுறையினர். பிடிக்கும் வரை பழகுகிறோம், கசக்கும் போது விலகுகிறோம் இதுதான் இவர்களது காதல் பார்முலா. திருமண வாழ்க்கை முறையில் கூட மேற்கத்திய கலாசாரமான ''லிவிங் டுகெதர்'' வேகமாக பரவி வருவதே இதற்கு சான்று. சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ''லவ்டுடே'' திரைப்படத்தில் இன்றைய செல்போன் தலைமுறையின் காதல் அனுபவத்தை யதார்த்தமாக காட்சிப்படுத்தி இருப்பதை காண முடியும். அந்த படத்தில் தனது முன்னாள் காதலரை நாயகி ''மாமாக் குட்டி'' என்று செல்போனில் பதிவு செய்து வைத்திருப்பார். மாமாக்குட்டி என்ற வசனம் இன்றைய இளைஞர்களிடம் மிகப்பெரிய ''டிரெண்டிங்''.

அதுபோல்தான் காதல் கடந்து வந்த பாதையும். கருப்பு- வெள்ளை காலத்தில் ''நாதா'' என்று தொடங்கிய நாகரீக வசனம் அன்று நவீன காலத்தில் ''மாமாக்குட்டி'' என்று கடந்து வந்துள்ளது. இருப்பினும் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறது.

காதல் ஆர்வலர்கள்

அந்தக் காதல் தற்போது சரியான பாதையில் பயணிக்கிறதா? காதலர் தினம் அவசியம்தானா? இதனால் நம்முடைய கலாசாரத்திற்கும், பண்பாட்டுக்கும் ஆபத்து ஏற்படுகிறதா? என்பவை குறித்து காதல் ஆர்வலர்கள், பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துகளை தெரிவிக்கின்றனர். அவற்றைப் பார்ப்போம்:-

உள்ளம் உருகி காதலியுங்கள்

சேலம் அங்கம்மாள் காலனியை சேர்ந்த காதல் தம்பதி பிரவீன்குமார்-கற்பகம்:-

சேலம் அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படித்தபோது இருவரும் மாணவர்கள் போராட்டத்தில் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் விரும்பி புரிந்து கொண்டு காதலித்தோம். பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நண்பர்களின் உதவியோடு திருமணம் செய்து கொண்டோம். எங்களது பெற்றோர்களை சம்மதிக்க வைக்க போராடினோம், ஆனால் முடியவில்லை. காதலிப்பதாக கூறுபவர்களை சந்தேகப்படலாம். ஆனால் காதலை சந்தேகப்படவே கூடாது. காதல் என்பது அனைத்து உயிரிடத்திலும் இயற்கையாக இருக்கும் உணர்வாகும். காதலை எதிர்ப்பவர்கள் சிலர் இருக்கலாம். காதலிக்காதவர்கள் இருக்கவே முடியாது. பெற்றோர்கள் எதிர்ப்பது சிலர் சாதி, மதம், வேறுபாடு (ஆணவம்) பார்க்கிறார்கள். கவுரவம் பார்க்கிறார்கள். பலர் தங்களது மகன், மகள் மீதான நேசத்தால் எதிர்காலம் குறித்த அச்சத்தால் எதிர்ப்பார்கள். அதுவும் ஒருவிதமான காதல்தான். அவர்களையும் புரிய வைக்க முடியும். சுகமான காதலை கொண்டாடுவதில் என்ன தவறு இருக்கிறது. உள்ளம் உருகி காதலியுங்கள், வாழ்க்கை அழகாக அமையும். காதல் திருமணம் செய்து கொண்ட அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இரு மனங்களின் சங்கமம்

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டியில் காதல் திருமணம் செய்த சுசீந்திரன்-சுலோச்சனா:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் காதல் திருமணம் செய்து கொண்டோம். இதுவரை ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்தி வருகிறோம். வாழ்க்கையில் காதல் தேவை, ஆனால் காதலர் தினம் தேவையில்லை. ஏனென்றால் காதல் திருமணம் செய்து கொண்ட எங்களுக்கு தினமும் காதலர் தினமாகவே கருதுகிறோம். காவியக்காதல், கற்பனை காதல், ஒருதலைக்காதல், நல்ல காதல் இப்படி எத்தனை வகைப்படுத்தினாலும் காதல் காதல்தான்.

இனம், மொழி, அந்தஸ்து, குலம், சாதி, அழகு போன்ற எந்த வரையறை வகைப்பாட்டிற்கும் உட்படாமல் மனிதனை மனதால் இணைக்கும் வல்லமை காதலுக்கு மட்டுமே இருக்கிறது. இரு மனங்களின் சங்கமம் காதல். காதல் சுவாச காற்றை அனைவரும் சுவாசிக்க வேண்டும். ஒரு பெண் ஒருவரை காதலிக்கிறாள் என்றால் அவர் நல்லவரா? கடைசி வரைக்கும் வைத்து காப்பாத்துவாரா? என்று பார்க்க வேண்டும். உண்மையான காதல் தோற்றுபோன வரலாறு இல்லை.

வாழ்க்கையில் தோற்பதில்லை

அஸ்தம்பட்டியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சவுமியா:-

அன்னையர் தினம், தந்தையர் தினம், நண்பர்கள் தினம் என்று இருப்பது போல் காதலர்களுக்காக இருக்கும் ஒரே தினம் காதலர் தினம். அதை அவர்கள் கொண்டாடுவது எந்த தப்பும் இல்லை. காதலர் தினத்தில் காதலர்கள் ஒருவரை ஒருவர் தங்களது அன்பை வெளிப்படுத்தும் விதமாக பரிசுகளை பரிமாறிக்கொள்கிறார்கள். ஏதோ பொழுது போக்கிற்காக காதலிப்பதாக இருந்துவிடாமல் உயிருக்கு உயிராய் காதலிக்க வேண்டும். கிடைத்த வாழ்க்கையை காதலர்கள் நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்க்கை தத்துவமான ஒருவருக்கு ஒருவர் விட்டுகொடுத்து வாழ வேண்டும். பெற்றோர்கள் பேச்சை கேட்டு அவர்களுடைய ஆசிர்வாதத்துடன் நடப்பவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் தோற்பதில்லை. நம் முன்னோர்கள் உருவாக்கி கடைபிடித்த பண்பாட்டையும், கலாசாரத்தையும் பின்பற்ற வேண்டியது இளைஞர்களின் தலையாய கடமையாகும்.

ஏற்றுக்கொள்ள முடியாது

இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமார்:-

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தான் காதலர் தினம். இன்றைய இளைஞர்கள் காதல் வசப்பட்டு தவறான பாதைகளில் செல்கிறார்கள். காதலிப்பது என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம். அதை எதிர்க்கவில்லை. ஆனால் பஸ்நிலையம், பூங்காக்கள் உள்ளிட்ட பொது இடங்களில் காதல் என்ற பெயரில் கட்டி பிடிப்பது, முத்தம் கொடுப்பது என முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இன்றைய கால இளைஞர்கள், இளம்பெண்கள் நமது கலாசாரம், பண்பாட்டை மறந்துவிடக்கூடாது. பெரியவர்களை மதிப்பது, அன்னையும், பிதாவும் முன்னரி தெய்வம் என்று முதலில் தெய்வமாக அன்னையைத்தான் பார்க்கிறோம். எந்த முடிவு எடுத்தாலும் பெற்றோர்களிடம் கேட்டே முடிவு செய்ய வேண்டும். அதேசமயம், உண்மையாக காதலித்தால் அவர்கள் திருமணம் செய்து ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு கடைசி வரைக்கும் நல்ல முறையில் வாழ்க்கையை வழிநடத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story