ஓட்டல், கடைகளில் தரமற்ற உணவு பற்றி புகார் தெரிவிக்க செல்போன் செயலி; கலெக்டர் ஸ்ரீதர் தகவல்


ஓட்டல், கடைகளில் தரமற்ற உணவு பற்றி புகார் தெரிவிக்க செல்போன் செயலி; கலெக்டர் ஸ்ரீதர் தகவல்
x

குமரி மாவட்டத்தில் கலப்பட உணவு குறித்து புகார் அளிக்க செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் கலப்பட உணவு குறித்து புகார் அளிக்க செல்போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கலப்பட உணவுகள்

குமரி மாவட்டத்தில் கலப்பட உணவு குறித்த புகார்களை 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு பொதுமக்கள் அனுப்பி வருகிறார்கள். அவ்வாறு அனுப்பப்படும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஓட்டல்கள் மற்றும் பேக்கரிகள் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் கடைகளில் பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் அரசின் உணவு பாதுகாப்புத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக உணவு தொடர்பான பொதுமக்களின் புகார் நடவடிக்கையை மிக எளிதாக்கும் விதமாகவும், விரைவு நடவடிக்கைக்கு ஏதுவாகவும் புதிய இணையதளம் மற்றும் செல்போன் செயலியை அரசு அறிமுகம் செய்துள்ளது.

செல்போன் செயலி

அந்த வகையில் பொதுமக்கள் தங்களது புகார்களை தட்டச்சு செய்யாமல் மிக எளிமையாக விவரங்களை தேர்ந்தெடுக்கும் வசதியுடன் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய 2 மொழிகளில் foodsafety.tn.gov.in என்ற இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இதே போல Tn food safety consumer என்ற செல்போன் செயலியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தரமற்ற உணவு, கலப்படம் உள்ளிட்ட புகார் குறித்த விவரங்களை பொதுமக்கள் இந்த இணையதளம் மூலமும், செல்போன் செயலி மூலமும் தெரிவித்து பயனடையலாம். மேலும் புகார்தாரரின் விவரங்கள் ரகசியம் பாதுகாக்கப்படும். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்துக்குள் ஆய்வு நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு புகார்தாரருக்கு ஆய்வறிக்கை அளிக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story