கடலூர் மத்திய சிறையில்மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், பேட்டரிகள் பறிமுதல்
கடலூர் மத்திய சிறையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன், பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் முதுநகர்,
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை அமைந்துள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ரகசிய தகவலின் பேரில் நேற்று காலை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் மத்திய சிறை வளாகத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது வெளிச்சிறை எண் 1 பகுதி வளாக கழிவறை முன்பு உள்ள செடி அருகில் மண்ணை தோண்டி பார்த்ததற்கான அறிகுறி தெரிந்தது. இதனால் சந்தேகமடைந்த சிறை காவலர்கள் மண்ணை தோண்டி பார்த்தபோது, அங்கு 1 செல்போன் மற்றும் 2 பேட்டரிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சிறை காவலர்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் மற்றும் 2 பேட்டரிகளை பறிமுதல் செய்ததுடன், இதுபற்றி கடலூர் முதுநகர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறை வளாகத்தில் செல்போன், பேட்டரிகளை புதைத்து வைத்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.