செல்போன் மடிக்கணினிகள் திருடியவர் கைது
டிப் டாப் உடை அணிந்து வந்து செல்போன், மடிக்கணினிகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்
கோவை
கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரி அருகே ஒருவர் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தார்.
அவரை போலீசார் கண்காணித்த போது ஆஸ்பத்திரிக்குள் செல்வதும், வெளியே வருவதுமாக இருந்தார். உடனே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
இதில், அவர் பொள்ளாச்சியை சேர்ந்த சசிகுமார் (வயது 47) என்பதும் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சார்ஜ் போட்டு வைக்கப்படும் செல்போன்கள், மடிக்கணினிகள் ஆகியவற்றை திருடிச்செல்பவர் என்பதும் தெரியவந்தது.
எனவே சசிகுமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர். இதில், கோவையில் அரசு அலுவல கங்கள், ஆர்.டி.ஓ. அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் 50-க்கும் மேற்பட்ட செல்போன்கள், மடிக்கணினிகள் திருடியதும், அவற் றை விற்று ஜாலியாக வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சசிகுமாரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். கைதான சசிகுமார் குறித்து போலீசார் கூறியதாவது:-
பொள்ளாச்சியில் இருந்து டிப்-டாப்பாக உடை அணிந்து கொண்டு கோவை வரும் சசிகுமார், தனக்கு தெரிந்தவர்களிடம் ஐ.டி. நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருவதாக கூறி உள்ளார்.
ஆனால் அவர் 8-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து உள்ளார். மேலும் அவர், அரசு அலுவலகங்களுக்கு சென்று அங்கு, சார்ஜ் போட்டு கிடக்கும் செல்போன்கள், மடிக்கணினிகள் (லேப்டாப்) ஆகியவற்றை யாரும் பார்க்காத போது நைசாக திருடி சென்று உள்ளார். இது போல் வீடுகளில் திறந்து இருக்கும் ஜன்னல் ஓரமாக வைக்கப்படும் செல்போன்களை திருடுவதை வழக்கமாக கொண்டு உள்ளார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.