ஓட்டலில் நூதன முறையில் செல்போன் திருட்டு
சங்கராபுரத்தில் ஓட்டலில் நூதன முறையில் செல்போன் திருடிய வாலிபரை போலீசாா் வலைவீசி தேடி வருகின்றனா்.
சங்கராபுரம்:
சங்கராபுரம் கடைவீதி அருகில் உள்ள ஓட்டலில் நேற்று முன்தினம் மதியம் 28 வயதுடைய வாலிபர் ஒருவர், முகக்கவசம் அணிந்தபடி வந்தார். அப்போது அவர், தன்னால் வாய் பேச முடியாது என்றும், நன்கொடை தாருங்கள் என்றும் எழுதப்பட்டிருந்த ஒரு நோட்டீசை கடை உரிமையாளரிடம் கொடுத்தார். அந்த சமயத்தில் கடை உரிமையாளர், தான் பேசிக்கொண்டு இருந்த ரூ.20 ஆயிரம் மதிப்பிலான செல்போனை மேஜை மீது வைத்தார். உடனே அந்த வாலிபர், செல்போன் மீது தனது நோட்டை வைத்து மறைத்தார். பின்னர் கடை உரிமையாளர் பணத்துடன் நோட்டீசை கொடுத்தார். அதை வாங்கிய அந்த வாலிபர், செல்போனை திருடிக்கொண்டு வெளியே வந்தார். அங்கு மோட்டார் சைக்கிளுடன் தயார் நிலையில் இருந்தவருடன், அந்த வாலிபர் ஏறி மின்னல் வேகத்தில் சென்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கடை உரிமையாளர், சங்கராபுரம் போலீசில் புகார் கொடுத்தார். மேலும் அந்த வாலிபர், செல்போன் திருடிய வீடியோவும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.