கோவில்களில் செல்போன்களுக்கு தடை


கோவில்களில் செல்போன்களுக்கு தடை
x

திருப்பதி கோவிலுக்குள் யாரும் செல்போன் கொண்டு போக முடியாது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும் அவ்வாறே செல்போன்கள் கொண்டு போக அனுமதி இல்லை. செல்போன்களை டிக்கெட் வாங்கிக்கொண்டு லாக்கர்களின் வைத்துவிட வேண்டும். சாமி கும்பிட்டு திரும்பி வரும்போது டிக்கெட்டை கொடுத்து விட்டு செல்போன்களை திரும்பப் பெற்றுக்கொள்ள முடியும்.

புதுக்கோட்டை

செல்போன்களுக்கு தடை

அதுபோல் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் இனி செல்போன்கள் கொண்டு போக முடியாது. அங்கு செல்போன்களுக்கு தடைவிதிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு ஆணையிட்டு இருக்கிறது. திருச்செந்தூர் கோவிலில் அர்ச்சகராக இருக்கும் சீதாராமன் என்பவர் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்து இருந்தார்.

''சாமி தரிசனம் செய்யவரும் பக்தர்களுக்கு இடையூறாக செல்போன்களை பயன்படுத்துவது, சுவாமிக்கு நடக்கும் தீபாராதனையை செல்போன்களில் பதிவு செய்வது, சிலைகள் முன்பு செல்பி எடுத்துக் கொள்வது, சிலைகளை படம் எடுப்பது போன்ற செயல்களில் பலர் ஈடுபடுகிறார்கள். எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும்'' என்று அந்த மனுவில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் முன்பு அந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போதுதான் நீதிபதிகள் மேற்கண்ட ஆணையை பிறப்பித்தார்கள்.

ஆதங்கம்

நீதிபதிகள் அப்போது வெளியிட்ட சில கருத்துகள், அவர்களின் மனவருத்தங்களை வெளிபடுத்தும் விதமாக அமைந்துள்ளன.

* கோவிலுக்குள் நடக்கும் பூஜைகளை அர்ச்சகர்களே வீடியோ எடுத்து தனிப்பட்ட யூடியூப் சேனல்களில் பதிவிடுகிறார்கள். இது ஏற்கத்தக்கது அல்ல.

* திருப்பதி கோவிலில் வாசலைக்கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலை முன்பு செல்பி எடுக்கும் அளவுக்கு சுதந்திரம் இருக்கிறது.

* கோவில்கள் சுற்றுலா தலங்கள் அல்ல. கோவிலுக்கு டீ-சர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெக்கின்ஸ் போன்ற உடைகள் அணிந்து வருவதை ஏற்க முடியவில்லை.

இவ்வாறு ஆதங்கப்பட்ட நீதிபதிகள்

திருச்செந்தூர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்வதை தடை செய்ய அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பிவிட்டு, அதன் நகலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று அறநிலையத்துறை கமிஷனருக்கு உத்தரவிட்டும் இருக்கிறார்கள்.

ஆவல் அதிகரிப்பு

பொதுவாக புதிய இடங்களுக்கோ, தொன்மையான இடங்களுக்கோ செல்கிறபோது அதன் அடையாளமாக புகைப்படம் எடுத்துக்கொள்ளும் ஆவல் அனைவரிடமும் இருப்பது இயல்பே. அதுவும் செல்போன் மனிதர்களின் ஆறாவது விரலாக மாறிவிட்ட நிலையில் அது பேராவலாக அதிகரித்துவிட்டது என்றே சொல்லலாம்.

இந்தநிலையில் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு போவதற்கு தடைவிதிப்பது பற்றி பெரம்பலூர், அரியலூரை சேர்ந்த பொதுமக்கள் குறிப்பாக பக்தர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதை காண்போம்.

பிரசித்தி பெற்ற கோவில்கள்

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற, பழைமையான கோவில்கள் ஏராளமாக உள்ளன. திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில், திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் கோவில், கீழ 3-ம் வீதி வரதராஜ பெருமாள் கோவில், கடையக்குடி பெருமாள் கோவில், நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில், கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், சாந்தநாத சாமி கோவில், திருவரங்குளம் அரங்குளநாதர் கோவில், திருவேங்கைவாசல் சிவன் கோவில், ஆவுடையார்கோவில் ஆத்மநாதசாமி கோவில், திருப்புனவாசல் விருத்தபுரீஸ்வரர் கோவில், திருமயம் சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், சிவன் கோவில், விராலிமலை முருகன் கோவில், பேரையூர் நாகநாத சாமி கோவில், குமரமலை முருகன் கோவில், நெடுங்குடி கைலாசநாதர் சாமி கோவில், கறம்பக்குடி திருமணச்சேரி கோவில், அறந்தாங்கி வீரமகாளியம்மன் கோவில், அழியாநிலை ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி, அரிமளம், கந்தர்வகோட்டை, கீரனூர், மணமேல்குடி உள்பட மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன.

இக்கோவில்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் செல்வது உண்டு. மேலும் திருவிழாக்களும் விமரிசையாக நடைபெறும். இக்கோவில்களிலும் பக்தர்கள் பலர் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்யும் போது சிலர் செல்போனில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பதை பார்க்க முடியும். அவர்களும் அந்த நேரத்தில் எடுக்கும் காட்சியை வைத்து அவ்வப்போது பார்த்துக்கொள்ளலாம் என நினைப்பது உண்டு. மேலும் அன்றைய தின அந்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்வதாக கொண்டுள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோவிலில் செல்போனுக்கு தடை விதிக்கப்பட்டதை போல அனைத்து கோவில்களிலும் செல்போனுக்கு தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து அர்ச்சகர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்ட போது கூறியதாவது:-

சமூகவலைத்தளம்

புதுக்கோட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் அர்ச்சகர் பாலாஜி:- ''கோவிலுக்கு பக்தர்கள் சாமி கும்பிட வரும் போது செல்பி எடுப்பது, வீடியோ, புகைப்படம் எடுப்பது அதிகரித்து விட்டது. கடவுளை தரிசிக்க வந்த இடத்தில் மனமுருகி பிரார்த்தனை செய்தாலே வேண்டுதல் நிறைவேறும். ஆனால் சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறக்கூடிய நேரத்தில் செல்போனில் வீடியோ, புகைப்படம் எடுப்பதை சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த நேரத்தில் சாமியை தரிசனம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். பக்தர்கள் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைக்கவும், சமூகவலைத்தளத்தில் பகிரவும் தான் போட்டோ, வீடியோ எடுக்கின்றனர். பக்திக்காக யாரும் எடுத்த மாதிரி தெரியவில்லை. அதனால் கோவிலுக்குள் செல்போன்கள் கொண்டு செல்ல தடைவிதிக்கலாம்'' என்றார்.

சாமி புகைப்படங்கள்

திருவப்பூர் மாரிக்கண்ணு:- ''திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்கள் சாமி கும்பிட வரும் போது செல்போனில் சிலர் படம் எடுப்பார்கள். நான் இங்கு மட்டுமில்லை எந்த கோவிலுக்கு சென்றாலும் செல்போனில் புகைப்படம், வீடியோ எடுப்பதில்லை. கோவிலுக்கு சாமி கும்பிட செல்கிறோம். அங்கு படம் எடுத்து எதற்கு. அதனால் சாமி கும்பிட்டு வந்துவிடுவது உண்டு. சில கோவில்களில் ஒரு சிலர் செல்போனில் புகைப்படம் எடுக்க முயன்றால் அதனை கோவில் நிர்வாகத்தினர், அங்குள்ள பணியாளர்கள் தடுத்து நிறுத்தியதை பார்த்திருக்கிறேன். அதுபோல எல்லா கோவில்களிலும் நடைமுறைப்படுத்தலாம். பக்தியோடு சாமி கும்பிட்டால் போதும். சாமி படங்கள் பெரும்பாலும் கடைகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. அதனை வாங்கி வைத்துக்கொள்ளலாம். கோவில்களிலும் சாமி புகைப்படங்கள், அலங்காரங்கள் தொடர்பான புகைப்படங்களை விற்பனை செய்யலாம். அதனை பக்தர்கள் வாங்கி தங்களது வீடுகளில் வைத்துக்கொள்ளலாம்'' என்றார்.

வழிபாடு நடத்துங்கள்

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஐகோர்ட் டு உத்தரவானது திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு மட்டும் தான் ஆகும். ஒரு சில பெரிய கோவில்களில் கோவிலுக்குள் செல்போனில் பேசுவதை தவிர்க்கவும் என எழுதி போர்டு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல செல்போன் பயன்படுத்துவதை தவிர்த்து வழிபாடு நடத்துங்கள் என எழுதி வைக்கப்பட்டிருக்கும். மேலும் சாமியை செல்போனில் படம் பிடித்தால் படம் பிடிக்காதீர்கள் என பணியாளர்கள் அறிவுறுத்துவது உண்டு" என்றார்.

கோவில்களில் நடைமுறை படுத்த வேண்டும்

பொன்னமராவதியை சேர்ந்த நெ.இரா.சந்திரன்:- கோவில்களில் சென்று இறைவனை வழிபடும் பொழுது அருகில் இருப்பவர்கள் தங்களது செல்போனை பயன்படுத்துகிற போது, அதில் அழைப்பு வரும் போது வரும் பாடல் வழிபடுபவர்களுக்கு இடையூறாக இருக்கிறது. கோவில்களில் செல்போன்கள் பயன்படுத்த தடை விதித்துள்ளதை போன்று பொன்னமராவதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் நடைபெற முறைப்படுத்த வேண்டும். இந்த நடைமுறையை பின்பற்றினால் கோவில்களுக்கு சென்று இறைவழிபாட்டை நடத்துகிற பக்தர்களுக்கு இடையூறு ஏற்படாமல் நிம்மதியாக இறைவனை வழிபடுகிற வாய்ப்பு கிடைக்கும் என்றார்.

பக்தர்களுக்கு இடையூறு

அன்னவாசல் மேலூரை சேர்ந்த மனோகரன்:- கோவிலுக்கு வரும் சிலர் கோவில் வளாகத்தில் நின்று செல்போனில் 'செல்பி' எடுக்கின்றனர். சிலர் சன்னதி அருகிலேயே செல்போனில் பேசுகின்றனர். இது பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. எனவே கோவிலில் அமைதியை கடைப்பிடிக்கவும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும், கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்க அறநிலையத்துறைக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுறுத்தியது வரவேற்க வேண்டிய நல்ல விசயம் என்றார்.

செல்போன் தடை செய்ய வேண்டும்

ஆவுடையார்கோவில் பாண்டி பத்திரம் கண்ணன்:- திருச்செந்தூர் கோவிலில் தடை செய்தது போல் ஆவுடையார் கோவிலிலும் செல்போன் பயன்படுத்த தடைசெய்யலாம் என்றார். புண்ணிய வயல் வீராச்சாமி:- திருச்செந்தூர் கோவிலில் செல்போன் பயன்படுத்துவதை தடைசெய்தது போல் ஆவுடையார்கோவிலிலும் செல்போன் தடை செய்யலாம். இதனால் சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் எந்த இடையூறு இல்லாமல் சாமி தரிசனம் செய்வார்கள் என்றார்.


Next Story