பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு


பெண் உள்பட 3 பேரிடம் செல்போன் பறிப்பு
x
தினத்தந்தி 18 Jun 2023 3:00 AM IST (Updated: 18 Jun 2023 6:47 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ஐ.டி. பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூர்

கோவையில் ஐ.டி. பெண் ஊழியர் உள்பட 3 பேரிடம் செல்போன் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஐ.டி. பெண் ஊழியர்

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் சுஜித்ரா (வயது 22). ஐ.டி. ஊழியர். இவர், நேற்று முன்தினம் காந்திபுரம் பஸ் நிலையத் தில் இருந்து வாளையார் செல்லும் பஸ்சில் ஏறினார்.

அப்போது அருகில் நின்ற 2 வாலிபர்கள் திடீரென்று கூட்ட நெரிசலை பயன் படுத்தி சுஜித்ராவின் பேக்கில் வைத்திருந்த செல்போனை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சுஜித்ரா கூச்சல் போட்டார். உடனே மற்ற பயணிகள் ஒரு வாலிபரை பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர்.

மற்றொருவர் தப்பி ஓடி விட்டார். விசாரணையில், செல்போன் பறித்தது ஊட்டியை சேர்ந்த ரித்திக் (22) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். தப்பி ஓடிய ஊட்டியை சேர்ந்த சஞ்சய் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

கால் டாக்சி டிரைவர்

கோவை சேரன்மாநகர் வி.கே.ரோட்டை சேர்ந்தவர் ஆனந்த சதீஷ் (42). கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று ஆர்.எஸ்.புரம் தடாகம் ரோடு பால்கம்பெனி அருகே காரை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென ஆனந்தசதீஷ் காரில் வைத்திருந்த 2 செல்போன்களை திருடி விட்டு தப்பி செல்ல முயன்றார்.

அந்த சத்தம் கேட்டு எழுந்த ஆனந்தசதீஷ் செல்போன் திருடிய நபரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து ஆர்.எஸ்.புரம் போலீசில் ஒப்ப டைத்தார். விசாரணையில் அவர் சுந்தராபுரம் ரோடு குமாரசாமி காலனியை சேர்ந்த குணா என்ற ஓட்ட பல் குணா (32) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

இதேபோல், திருநெல்வேலி மாவட்டம் சங்கர்நகரை சேர்ந்தவர் சையது முஸ்தபா (20). கல்லூரி மாணவர். இவர், கோவையில் நடைெபற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பின்னர் அவர் ஊருக்கு செல்வதற்காக காந்திபுரம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் திடீரென்று முஸ்தபாவின் செல்போனை பறித்து கொண்டு தப்ப முயன்றார்.

அவரை அங்கிருந்தவர்கள் மடக்கி பிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் மத்தியபிர தேசத்தை சேர்ந்த லோகேந்திர சிங் (21) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story