பழைய செல்போன் வாங்கறீங்களா? உஷார் மக்களே..!!
உலகத்தை உள்ளங்கைக்குள் கொண்டு வந்த பெருமை ஆண்டிராய்டு போன்களுக்கு உண்டு. இதனால் உலகம் முழுவதும் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்கிறார்கள்.
எச்சரிக்கை
இன்றைய நிலையில் ஏழை-பணக்காரர் என்ற பாகுபாடில்லாமல் பெரும்பாலானவர்களிடம் ஆண்டிராய்டு போன் உள்ளது. புதிய மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் தினசரி புதுப்புது ரக போன்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது.
இதனால் புதிய செல்போன்களை வாங்க பலரும் ஆர்வம் காட்டுவதால் பழைய போன்கள் அதிக அளவில் விற்பனைக்கு வருவது இயல்பான விஷயமாகவே உள்ளது. அதேநேரத்தில் பழைய ஆண்டிராய்டு போன்களை வாங்குவதில் உள்ள ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கை உணர்வு அவசியம் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்துள்ளனர்.
வாங்குவதிலும்,விற்பதிலும் கவனம்
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
பழைய செல்போன்களை வாங்குவதில் மட்டுமல்லாமல் விற்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். பொதுவாக நாம் பயன்படுத்தும் ஆண்டிராய்டு போன்களில் நமது குடும்ப புகைப்படங்கள், வங்கிக்கணக்கு உள்ளிட்ட முக்கிய தகவல்கள் போன்றவற்றை சேமித்து வைத்திருப்போம். ஒரு சிலர் தங்களது அந்தரங்க புகைப்படங்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் கூட செல்போன்களில் சேமித்து வைக்கின்றனர். செல்போன்களை விற்பனை செய்யும்போது அவற்றை அழித்து விட்டு விற்பனை செய்தாலும், நவீன தொழில்நுட்பங்களைப்பயன்படுத்தி அவற்றை மீட்டெடுக்கும் அபாயம் உள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும் நாம் செல்போன் வாங்கும்போது நமது பெயரில் ஐ.எம்.இ.ஐ எண் பதிவு செய்யப்பட்டிருக்கும். நாம் விற்பனை செய்த பழைய செல்போனை வாங்கும் நபர் சமூக விரோதச் செயல்களுக்கோ அல்லது வேறு குற்ற சம்பவங்களுக்கோ பயன்படுத்தினால் போலீசாரின் பார்வை நம்மை நோக்கி திரும்பும் அபாயம் உள்ளது. எனவே நம்பகமான இடங்களில் மட்டுமே நமது செல்போன்களை விற்பனை செய்வது நல்லது. அத்துடன் பழைய செல்போன்களை வாங்கி விற்கும் கடைக்காரர்கள் செல்போன்களை வாங்குபவர், விற்பவரின் ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை பெற்று வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.
போலீசில் புகார் அளிப்பதில்லை
அதுபோல் பழைய செல்போன்களை வாங்குபவர்களும் பல விதங்களில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆண்டிராய்டு போன்களில் திருட்டைத்தடுப்பதற்கான செயலிகள் உள்ளிட்ட நவீன வசதிகள் பல வந்தாலும் செல்போன்கள் திருட்டு அதிக அளவில் நடந்து கொண்டுதான் உள்ளது. இவ்வாறு செல்போன்களை பறி கொடுத்தவர்கள் பலரும் போலீசில் புகார் அளிப்பதில்லை.
எனவே திருட்டு போன்கள் விற்பனைக்கு வருவதை தடுக்க முடியாத நிலையே உள்ளது. எனவே நாம் வாங்கும் பழைய செல்போனின் முந்தைய உரிமையாளர் யார் என்பதை தெரிந்து கொள்வது அவசியமாகும். ஏனென்றால் நாம் வாங்கும் பழைய போன் திருடப்பட்டதாக இருந்தால் அதன் ஐ.எம்.இ.ஐ எண் மூலம் நாம் சிக்கலில் மாட்டிக்கொள்ளக்கூடும்.
விஞ்ஞான வளர்ச்சி
மேலும் சைபர் கிரைம் குற்றவாளிகள் பழைய ஆண்டிராய்டு போன்களை பயன்படுத்தி நமக்கு சிக்கலை உண்டாக்கக் கூடும். அதன்படி பழைய போன்களில் நம்மை கண்காணிக்கும் ஸ்பை ஆப்கள் உள்ளீடு செய்யப்பட்டிருக்கலாம். அவற்றின் மூலம் நமது தகவல்களை எங்கோ தொலைவில் இருக்கும் நபர் தெரிந்து கொள்ளும் அபாயம் உள்ளது.
இன்றைய நிலையில் தொலைவிலிருந்து கொண்டே நமது செல்போனை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவும், கேமரா உள்ளிட்டவற்றை இயக்கவும் முடியும் என்னுமளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக சமூக விரோதிகள் பயன்படுத்திக் கொள்ளக் கூடும். எனவே முடிந்த வரை பழைய செல்போன்களை வாங்குவதைத் தவிர்க்கவும். அவ்வாறு வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் நம்பகமான நபர்களிடம் மட்டுமே வாங்கவும்.
முழுமையாக பார்மட் செய்து
மேலும் தொழில்நுட்பம் தெரிந்தவர்களின் உதவியுடன் நீங்கள் வாங்கும் பழைய ஆண்டிராய்டு போனை முழுமையாக பார்மட் செய்து விடுங்கள். இவ்வாறு நமது போனை கையாள்பவர்கள் மிகவும் நம்பிக்கைக்குரியவராக இருப்பது அவசியமாகும்.
வாழ்க்கைத் துணையை விட நெருக்கமாய் நம்முடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் செல்போன்களை வாங்குவதிலும், விற்பனை செய்வதிலும் கவனமாக இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்படும். இவ்வாறு சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.