சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்


சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்
x

தாட்கோ மூலம் மானியத்தில் சிமெண்டு விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்திடும் வகையில் தொழில் முனைவோரின் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவர், ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் விவசாய நிலம் வாங்குதல் போன்ற திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் வழங்கப்படுகிறது.

100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோருக்கு தமிழ்நாடு சிமெண்டு கழகத்தின் விற்பனை முகவராகவும், அத்துடன் கூடுதலாக இதர கட்டுமான பொருட்கள் மூலம் விற்பனை செய்து வருவாய் ஈட்டும் வகையில் ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2¼ லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3¾ லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

50 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் ஆவின் பாலகம் அமைத்து ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2¼ லட்சம் மானியமும், பழங்குடியினருக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது ரூ.3¾ லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்களுக்கு சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில் அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகப்பட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பொருளதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் www.tadhco.com என்ற தாட்கோ இணையதள முகவரியில் விண்ணப்பம் செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தொிவித்துள்ளார்.


Next Story