அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா
குன்னூர் அருகே அரசு பள்ளியில் நூற்றாண்டு விழா நடந்தது.
குன்னூர்,
குன்னூர் அருகே பேரட்டி கிராமத்தில் கடந்த 1922-ம் ஆண்டு தொடக்கப் பள்ளி தொடங்கப்பட்டது. இதையடுத்து 35 ஆண்டுகளுக்கு பின்னர் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு, தமிழக அரசு மூலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த குழந்தைகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பேரட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதற்கு குன்னூர் சப்-கலெக்டர் தீபனா விஸ்வேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தாமோதரன், குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் புனிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாணவ-மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். பின்னர் சிலம்பம், கராத்தே மேஜிக் போட்டிகள் நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. இதில் தாசில்தார் சிவக்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், பேரட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஜெகதீஷ், துணைத் தலைவர் சுகுணா, கன்டோன்மென்ட் முன்னாள் துணைத் தலைவர் வினோத்குமார், பள்ளி தலைமை ஆசிரியர் ரீனா மற்றும் பலர் கலந்துகொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.