கடல்வாழ் உயிரினமான அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் திறப்பு


கடல்வாழ் உயிரினமான அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் திறப்பு
x

6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்சுக்கு பெரம்பலூரில் மையம் திறக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

பெரம்பலூர்

அமோனைட்ஸ் மையம்

41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றி சுமார் 6½ கோடி ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போன கடல்வாழ் உயிரினமான அமோனைட்ஸ் எனப்படும் தலைக்காலி (நத்தை போன்ற தோற்றமுடையது) குறித்து அறிந்து கொள்ளும் வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட, அதன் தொல்லுயிர் எச்சங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முதல் முறையாக ''அமோனைட்ஸ் மையம்" பெரம்பலூர் தாசில்தார் அலுவலக வளாகத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கினார். இதில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து அமோனைட்ஸ் மையத்தை பொதுமக்களுடன் பார்வையிட்டார். பிரபாகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார்.

தொல்லுயிர் பூங்கா

மையத்தில் அமோனைட்ஸ்களின் முழு உருவம் எவ்வாறு இருக்கும் என்பதை பொதுமக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக அந்த உயிரினத்தின் மாதிரி தோற்றம் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விழாவில் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், தொல்லுயிர் எச்சங்களை பாதுகாத்திட வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழக முதல்-அமைச்சர் பெரம்பலூர் மாவட்டத்தில் தொல்லுயிர் பூங்கா அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். அதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் தொல்லுயிர் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த பூமியில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமோனைட்ஸ் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150-க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

வெளிநாடுகளில் இருந்து...

தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ள அமோனைட்ஸ் மையத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள சில அரியவகை அமோனைட்ஸ்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆய்வறிஞர்களும், மாணவ-மாணவிகளும் இந்த மையத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும், என்றார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி, வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, உதவி இயக்குனர் (கனிம வளம்) சத்தியசீலன், மண்ணியல் ஆய்வாளர் பிரசாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story