மத்திய பா.ஜ.க. அரசு பதவிவிலக கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல்
மத்திய பா.ஜ.க. அரசு பதவிவிலக கோரி தூத்துக்குடியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில், மத்திய பா.ஜ.க. அரசு பதவி விலக கோரி சாலை மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
3 நாட்கள் போராட்டம்
மத்திய பா.ஜனதா ஆட்சியில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மத ஒற்றுமை சீர்குலைப்பு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தனியாருக்கு தாரைவார்ப்பு ஆகியவை அதிகரித்து விட்டதாக கூறியும், இதற்கு காரணமான பா.ஜனதா அரசு பதவி விலகக் கோரியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று முதல் 3 நாட்கள் தொடர் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
சாலை மறியல்
அதன்படி நேற்று தூத்துக்குடி பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு வ.உ.சி சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் பி.கரும்பன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளரும், மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான ஜி.தனலெட்சுமி, ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட செயலாளர் லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில குழு உறுப்பினர் ஞானசேகர், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாகிகள் மாடசாமி, விஜயகுமார், லெனின் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலையில் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 40 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர். இதனால் அந்த சாலையில் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.