மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு


மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு
x
தினத்தந்தி 11 Oct 2023 12:15 AM IST (Updated: 11 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரியிலிருந்து குஜராத் வரை செல்லும் மத்திய பாதுகாப்பு படை பெண் வீரர்களுக்கு விழுப்புரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம்:

சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31-ந் தேதி, தேசிய ஒற்றுமை தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் வீரர்கள் கன்னியாகுமரி, ஸ்ரீநகர், ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து 3 குழுக்களாக தனித்தனியே புறப்பட்டு இம்மாத இறுதியில் குஜராத் மாநிலம் வந்தடைகின்றனர். தொடர்ந்து, வருகிற 31-ந் தேதி நடைபெறும் தேசிய ஒற்றுமை தின விழாவில் பங்கேற்கின்றனர். இதையொட்டி பெண்களுக்கு அதிகாரமளித்தல், குழந்தைகள் பாதுகாப்பு ஆகிய கருத்துகளை மையப்படுத்தி சி.ஆர்.பி.எப். பெண் வீரர்கள், மோட்டார் சைக்கிளில் பயணம் மேற்கொள்கின்றனர். கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து 25 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்ட 50 பெண் வீரர்கள் மதுரை, திருச்சி வழியாக புறப்பட்டு விழுப்புரம் வந்தடைந்தனர். அவர்களுக்கு விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலை சந்திப்பு பகுதியில் காவல்துறை, காவல் சிறுவர், சிறுமியர் மன்றம், விழுப்புரம் ரோட்டரி சங்கம், சமூக நலத்துறை, நேரு யுவகேந்திரா, சமூகநல அமைப்புகளின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இவர்களை மாவட்ட சமூகநல அலுவலர் ராஜம்மாள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோவிந்தராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ், காவல் சிறுவர், சிறுமியர் மன்றத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், நேரு யுவகேந்திராவின் இளையோர் ஒருங்கிணைப்பாளர் ராம்சந்திரன், சமூகநல கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் பாபுசெல்வதுரை, லட்சுமிநாராயணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து, கோலியனூர், வளவனூர் வழியாக புதுச்சேரிக்கு புறப்பட்ட குழுவினர், அங்கிருந்து சென்னைக்கு செல்கின்றனர்.


Next Story