தஞ்சை அய்யங்குளத்திற்கு மத்தியஅரசின் கலாசார விருது


தஞ்சை அய்யங்குளத்திற்கு மத்தியஅரசின் கலாசார விருது
x

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தஞ்சை அய்யங்குளத்திற்கு மத்தியஅரசின் கலாசார விருது வழங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் புதுப்பிக்கப்பட்ட தஞ்சை அய்யங்குளத்திற்கு மத்தியஅரசின் கலாசார விருது வழங்கப்பட்டுள்ளது.

அய்யங்குளம்

தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர் ஆட்சி காலத்தின் போது மேலவீதியில் 7 ஆயிரத்து 630 சதுரமீட்டர் பரப்பளவில் அய்யங்குளம் உருவாக்கப்பட்டது. இந்த குளத்திற்கு பெரியகோவில் அருகே உள்ள சிவகங்கை குளத்தில் இருந்து தண்ணீர் கொண்டு வருவதற்கான நீர்வழி பாதையும் அமைக்கப்பட்டது. இந்தநிலையில், தஞ்சை மாநகராட்சியின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், அய்யன்குளம் ரூ.5 கோடியே 12 லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டன. குளத்தை சுற்றிலும் நடைபாதைகள், மின் விளக்குகள் பொருத்தப்பட்டது. மேலும், குளத்தை சுற்றியுள்ள நடைபாதை பக்கவாட்டு சுவற்றில் 64 வகையான ஆயக்கலைகள், ஐவகை நிலங்கள், 9 நவரத்தினங்கள், 16 வகையான செல்வங்களைக் குறிக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சுரங்க வழி நீர் பாதை கண்டுபிடிக்கப்பட்டு அவற்றின் மூலம் தண்ணீர் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஸ்மார்ட் சிட்டிஸ் விருது போட்டி, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் சார்பில் கடந்த 2022-ம் ஆண்டு, ஆகஸ்டு மாதம், சுற்றுச்சூழல், கலாசாரம், பொருளாதாரம், ஆளுமை என்ற தலைப்புகளில், 80 ஸ்மார்ட் சிட்டியில், இருந்து 845 பரிந்துரைகளை பெற்றன. இதில் கலாசார பிரிவில் 39 நகரில் இருந்து 67 பரிந்துரைகள் அனுப்பி வைக்கப்பட்டது.

கலாசார விருது

பின்னர், கடந்த ஜனவரி மாதம் 12 நகரங்களும், பிப்ரவரி மாதம் 6 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டன. இறுதியாக கலாசார பிரிவுகளில் 3 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் அறிவிப்பு வெளியானது. இதில், பாரம்பரிய கட்டமைப்பை புதுப்பித்தல் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பாரம்பரிய சுற்றுலாவை மேம்படுத்துதல் பணிக்காக அகமதாபாத் நகரமும், ஹெரிடேஜ் வாக் திட்டத்தின் கீழ் சதர்மன்சில் வளாகத்திற்கு அருகில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களை மீட்டெடுத்தலுக்காக போபால் நகரமும், குளங்கள் பாதுகாப்பு மற்றும் கலாசாரத்தை பேணி காத்தல் பிரிவில் தஞ்சை அய்யன்குளம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான விருதை அடுத்தமாதம் (செப்டம்பர்) 27-ந் தேதி, மத்தியப்பிரதேசத்தின், இந்தூரில் ஜனாதிபதி வழங்க உள்ளதாக தஞ்சை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story