திருநங்கை தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
குழந்தையை தத்து எடுக்கும் விண்ணப்பம் நிராகரிப்பு: திருநங்கை தொடர்ந்த வழக்கிற்கு பதில் அளிக்க வேண்டும் மத்திய அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.
சென்னை,
சென்னையில் குடியேற்றத் துறையில் அதிகாரியாக பணியாற்றும் திருநங்கை பிரித்திகா யாஷினி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், ''பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வறுமையை போக்க, ஒரு குழந்தையை தத்து எடுக்க முடிவு செய்தேன். டெல்லியில் உள்ள மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்தேன்.
ஆனால், திருநங்கை என்ற காரணத்தை கூறி தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
தத்தெடுப்பதில் சிறார் நீதி சட்டம், எந்த பாலின பாகுபாட்டையும் தெரிவிக்கவில்லை. குழந்தையை நல்ல முறையில் வளர்க்க கூடியவராக இருக்க வேண்டும் என்ற விதிகள் மட்டுமே உள்ளன. அரசுப் பணியில் உள்ளதால் குழந்தையை சிறந்த முறையில் என்னால் வளர்க்க முடியும். எனவே, என் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, மனுவுக்கு வருகிற 30-ந்தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கும், மத்திய தத்தெடுப்பு ஆணையத்துக்கும் உத்தரவிட்டுள்ளார்.