மத்திய அரசு நடத்தும் எஸ்.எஸ்.சி.தேர்வு வினாத்தாள் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும் - எம்.பி. வலியுறுத்தல்
எஸ்.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும் என்று எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
எஸ்.எஸ்.சி. தேர்வு வினாத்தாள் தமிழ் மொழியிலும் இருக்க வேண்டும் என்று எம்.பி. வலியுறுத்தி உள்ளார்.
விண்ணப்பம்
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (எஸ்.எஸ்.சி.) சுமார் 20 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்த விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளது. ஆனால், இந்த தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, ஒன்றிய பணியாளர், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்குக்கு மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையமான எஸ்.எஸ்.சி. 20 ஆயிரம் காலியிடங்களுக்கு பணி நியமன தேர்வு நடத்த உள்ளது. இந்த தேர்வில் நாடு முழுவதிலும் இருந்து சுமார் ஒரு கோடி பேர் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. ஆனால், வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் மட்டும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றுவதற்கு மாநில மொழிகளிலும் தேர்வு நடத்துவதே நியாயமானதாகும்.
மொழி அறிவு
உள்ளூர் மொழிஅறிவு இல்லாமல் பணியாற்றுவதும் சிரமம். எஸ்.எஸ்.சி.யின் இந்த அறிவிப்பு சமவாய்ப்பு கோட்பாட்டுக்கு எதிரானது. இந்தி பேசாத மாநிலங்களை சேர்ந்தவர்கள் இந்த தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறுவது கடினம். அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களின் பிரதிநிதித்துவம் மிக குறைவாக உள்ளது என்ற பிரச்சினை மத்திய அரசு அலுவலகங்களில் உள்ளது. இந்த நிலையில், இந்த தேர்வை மாநில மொழியில் குறிப்பாக தமிழகத்தில் நடக்கும் தேர்வை தமிழ் மொழியிலும் நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.