மத்திய அரசு பரிந்துரைத்தும் உரித்த தேங்காயை கொள்முதல் செய்வதற்கு அனுமதி வழங்கவில்லை-அதிகாரிகள் மீது உற்பத்தியாளர்கள் புகார்
உரித்த தேங்காயை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு பரிந்துரைத்தும் அனுமதி வழங்கவில்லை என்று அதிகாரிகள் மீது தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் புகார் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
உரித்த தேங்காயை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு பரிந்துரைத்தும் அனுமதி வழங்கவில்லை என்று அதிகாரிகள் மீது தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தினர் புகார் தெரிவித்தனர்.
தேங்காய் கொள்முதல்
பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், சுல்தான்பேட்டை பகுதிகளில் தென்னை விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இங்கிருந்து தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் தேங்காய் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதை தவிர கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தேங்காய் விளைச்சல் அதிகரிப்பு காரணமாக விலை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் ஒரு தேங்காய் ரூ.8-க்கு விற்பனை ஆகிறது. இதற்கிடையில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொப்பரை தேங்காய்கள் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதேபோன்று குறைந்தபட்ச விலைக்கு உரித்த தேங்காயை கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அனுமதி அளித்தது. ஆனால் இதுவரைக்கும் அனுமதி கிடைக்காததால் தேங்காயை கொள்முதல் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்தை சேர்ந்த பத்மநாபன் என்பவர் கூறியதாவது:-
உட்கட்டமைப்பு வசதிகள்
மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு (நேபட்) உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் உரித்த தேங்காயை கொள்முதல் செய்து கொள்ளலாம் என்று அனுமதி அளித்தது. சுமார் 4 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் செய்வதற்கு தயார் என்று அறிவிக்கப்பட்டது. மேலும் ஒரு குவிண்டால் தேங்காயை ரூ.2930-க்கு கொள்முதல் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சிறப்பு குழுவினர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது இடவசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. மத்திய அரசு பரிந்துரை செய்தும் அதிகாரிகள் அனுமதி கொடுக்கவில்லை. தற்போது கொப்பரை தேங்காய் கொள்முதலில் தனியார் நிறுவனங்கள் தான் பயன்பெறுகின்றன. சிறு, குறு விவசாயிகளுக்கு எந்த பயனும் இல்லை. உரித்த தேங்காயை கொள்முதல் செய்வதற்கு உரிய அனுமதியை பெற்று கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.