மத்திய சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைப்பு: சென்னை ரவுடியின் தம்பி உள்பட 2 பேர் கைது
கடலூா் மத்திய சிறை அதிகாரி வீட்டில் பெட்ரோல் ஊற்றி தீவைத்த சம்பவம் தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவுடியின் தம்பி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மத்திய சிறை அதிகாரி
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 33). கடலூர் மத்திய சிறையில் உதவி சிறை அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இதற்காக அவர் குடும்பத்துடன் மத்திய சிறை அருகே உள்ள உதவி சிறை அலுவலர்களுக்கான குடியிருப்பில் வசித்து வருகிறார்.
கடந்த 24-ந்தேதி மணிகண்டன் மட்டும் கும்பகோணம் சென்றிருந்தார். இந்நிலையில் கடந்த 28-ந்தேதி அதிகாலை அவரது வீட்டின் ஜன்னல் வழியாக மர்மநபர்கள் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி சென்றனர்.
இந்த சம்பவத்தில் மணிகண்டன் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சிறை அதிகாரியின் வீட்டுக்கு தீவைத்தவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது.
சதித்திட்டம்
போலீசார் நடத்திய விசாரணையில், கடலூர் மத்திய சிறை காவலராக இருந்த சேலம் மாவட்டம் வாழப்பாடி சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (44), முன்விரோதம் காரணமாக மணிகண்டனை குடும்பத்துடன் தீர்த்துக்கட்ட முடிவு செய்து, சிறையில் இருக்கும் பிரபல ரவுடி சென்னை எண்ணூர் தனசேகர் மூலம் சதித்திட்டம் தீட்டி சென்னை திருநீலகண்ட நகரை சேர்ந்த தினேஷ் (23) உள்ளிட்ட 7 பேருடன் சேர்ந்து பெட்ரோலை ஊற்றி தீவைத்தது தெரியவந்தது.
இதையடுத்து செந்தில்குமார், தினேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த தனசேகரின் தம்பி மதிவாணன், அவரது நண்பர் மவுலிதரன் உள்ளிட்ட 6 பேரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர்.
2 பேர் கைது
இந்நிலையில் திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் பதுங்கி இருந்த மதிவாணன் (23), மவுலிதரன் (26) ஆகியோரை நேற்று அதிகாலை போலீசார் கைது செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.