செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணநேரம் குறைப்பு -தெற்கு ரெயில்வே அறிவிப்பு


செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணநேரம் குறைப்பு -தெற்கு ரெயில்வே அறிவிப்பு
x

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலின் பயணநேரம் 1 மணி நேரம் குறைக்கப்பட்டதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

சென்னை,

மதுரை-தூத்துக்குடி இடையே அகல ரெயில் பாதை பணிகளை தெற்கு ரெயில்வே வேகமாக செயல்படுத்தி வந்தது. இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் இப்பணிகள் முடிவு பெற்றது. இதையடுத்து, அகல ரெயில் பாதையில் சோதனை ஓட்டம், பாதுகாப்பு ஆணையரின் ஆய்வு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருநெல்வேலி-திருச்செந்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் எக்பிரஸ் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை எழும்பூர்-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16105) திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் இடையேயான ரெயில் நிலையங்களுக்கு வரும், புறப்படும் நேரம் வருகிற 31-ந்தேதி முதல் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலிக்கு காலை 5.55 மணிக்கு வந்து 6 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 4.55 மணிக்கு வந்து 5 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 6.19 மணிக்கு வந்து 6.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.17 மணிக்கு வந்து 5.18 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 6.29 மணிக்கு வந்து 6.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.31 மணிக்கு வந்து 5.32 மணிக்கும் புறப்பட்டு செல்லும். இதேபோல, நாசரேத்துக்கு 6.42 மணிக்கு வந்து 6.43 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.42 மணிக்கு வந்து 5.43 மணிக்கும், குரும்பூருக்கு 6.50 மணிக்கு வந்து 6.51 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.49 மணிக்கு வந்து 5.50 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 6.57 மணிக்கு வந்து 6.58 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.55 மணிக்கு வந்து 5.56 மணிக்கும், காயல்பட்டினத்துக்கு 7.04 மணிக்கு வந்து 7.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 5.59 மணிக்கு வந்து 6 மணிக்கும் புறப்படும். திருச்செந்தூருக்கு காலை 8 மணிக்கு செல்வதற்கு பதிலாக காலை 6.50 மணிக்கு சென்றடையும். இதன் மூலமாக பயணிகளுக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் பயண நேரம் குறையும்.

ஏப்ரல் 1-ந்தேதி முதல்...

இதேபோல, ஏப்ரல் 1-ந்தேதி முதல் திருச்செந்தூர்-சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (16106) இரவு 7.10 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஒரு மணி நேரம் பின்னதாக 8.10 மணிக்கு புறப்படும். காயல்பட்டினத்துக்கு 7.19 மணிக்கு வந்து 7.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.17 மணிக்கு வந்து 8.18 மணிக்கும், ஆறுமுகநேரிக்கு 7.25 மணிக்கு வந்து, 7.26 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.20 மணிக்கு வந்து 8.21 மணிக்கும், குரும்பூருக்கு 7.32 மணிக்கு வந்து 7.33 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக, 8.26 மணிக்கு வந்து 8.27 மணிக்கும், நாசரேத்துக்கு 7.42 மணிக்கு வந்து 7.43 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.35 மணிக்கு வந்து 8.36 மணிக்கும், ஸ்ரீவைகுண்டத்துக்கு 7.54 மணிக்கு வந்து 7.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.45 மணிக்கு வந்து, 8.46 மணிக்கும், செய்துங்கநல்லூருக்கு 8.07 மணிக்கு வந்து 8.08 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 8.54 மணிக்கு வந்து 8.55 மணிக்கும், திருநெல்வேலிக்கு 9.10 மணிக்கு வந்து 9.15 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதன் மூலம் ஒரு மணி நேரம் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.

20 நிமிடம் வரை..

மேலும், திருநெல்வேலி - திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தையும் அதிகரிக்க தெற்கு ரெயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி-திருச்செந்தூர் இடையே இயக்கப்படும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் 5 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை வேகம் அதிகரிக்கப்பட உள்ளது. பாலக்காடு - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (16731) 30 நிமிடம் வேகமாகவும், மணியாச்சி - திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் (06679) 15 நிமிடம் வேகமாகவும், திருச்செந்தூர்-மணியாச்சி எக்ஸ்பிரஸ் (06680) 20 நிமிடம் வேகமாகவும், திருச்செந்தூர்-பாலக்காடு (16732) 15 நிமிடம் வேகமாகவும் இயக்கப்பட உள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.


Next Story