பயிற்சி சான்றிதழ், பணிநியமன ஆணை வழங்கும் விழா
பயிற்சி சான்றிதழ், பணிநியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது
திருப்பத்தூர்
திருப்பத்தூர் காட்டாம்பூரில் உள்ள நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் கேட்டரிங், சர்வே, நர்சிங், தையல், எலக்ட்ரானிக்ஸ் போன்ற பல்வேறு பாடப்பிரிவுகள் மத்திய அரசின் தீனதயாள் உபத்தியாய கிராமின் கவுசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் நடைபெற்று வருகிறது. இக்கல்லூரியில் பயின்ற 30 பேர் கொண்ட 9 திறன்பயிற்சி குழுக்களாக 270 பேருக்கு பயிற்சி சான்றிதழும் 10 பேருக்கு பணிநியமன உத்தரவும் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி தாளாளர் காசிநாதன் தலைமை தாங்கினார். பாலகிருஷ்ணன், சுரேஷ்பிரபாகர், கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருச்சி தொழில்துறை கூடுதல் ஆணையாளர் கே.ஜெயபாலன் மாணவர்களுக்கு பயிற்சி சான்றிதழ் மற்றும் பணிநியமன ஆணை வழங்கி மாணவர்கள் தொழில்துறை கல்விகளை அக்கறையுடன் படித்து வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என கேட்டுக் கொண்டார். முன்னதாக கல்லூரி முதல்வர் வெங்கடேசன் வரவேற்றார். பேராசிரியர் பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இந்நிறுவனம் 25 ஆண்டுகளாக பயிற்சி அளித்து வருகிறது. இங்கு மேற்கண்ட பாடப்பிரிவுகளில் ஓராண்டு மற்றும் 2 ஆண்டுகளுக்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாணவர்கள் வெளிமாநிலம், வெளிநாடுகளில் வளாகத்தேர்வு மூலம் பணி வழங்கப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இதனால் இப்பகுதி இளைஞர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்து வருகின்றனர். இங்கு பயிலும் அனைவருக்கும் மாநில அரசின் சான்றிதழ் வழங்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர் என்று காசிநாதன் கூறினார்.