தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில்டெல்லி மருத்துவக்குழுவினர் ஆய்வு மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு தேசிய தரச்சான்று வழங்க நடவடிக்கை


தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில்டெல்லி மருத்துவக்குழுவினர் ஆய்வு மகப்பேறு சிகிச்சை பிரிவுக்கு தேசிய தரச்சான்று வழங்க நடவடிக்கை
x
தினத்தந்தி 4 May 2023 7:00 PM GMT (Updated: 4 May 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவிற்கு தேசிய தரச் சான்றிதழ் வழங்குவது தொடர்பாக டெல்லியை சேர்ந்த மருத்துவக்குழுவினர் நேரில் ஆய்வு நடத்தினார்கள்.

தரச்சான்று அளிக்க திட்டம்

தர்மபுரி மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி கடந்த 2008-ம் ஆண்டு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு தற்போது எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வசதி, 16 அறுவை சிகிச்சை அரங்குகள், சி.டி. ஸ்கேன் வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தினமும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புற நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கிறார்கள்.

இதேபோல் 1,230 படுக்கைகளுடன் கூடிய உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சை பிரிவில் அதிக பிரசவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பிரிவின் தரத்தை மேம்படுத்தவும், தரச்சான்று அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

ஆய்வு

இதுதொடர்பாக டெல்லியில் உள்ள தேசிய உடல்நல ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த டாக்டர் பிந்து உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர். பிரசவ வார்டு, ரத்த வங்கி, ஆய்வகங்கள், அறுவை சிகிச்சை அரங்கங்கள் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பிரசவத்திற்கு முன்னரும், பின்னரும் அளிக்கப்படும் சிகிச்சைகள், அறுவை சிகிச்சை அரங்குகளின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்போது மருத்துவ கல்லூரி டீன் அமுதவல்லி, மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் காந்தி, உதவி உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சந்திரசேகர் மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் உடன் இருந்தனர்.


Next Story