மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழ்
மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார்.
மாநில நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே ஒற்றுமையை பலப்படுத்தவும், குழுக்களிடையே ஆரோக்கியமான போட்டிகளை உருவாக்கிடவும் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் சுயஉதவி குழுக்களால் அடைந்த பலன்கள் சமூக அங்கீகாரம், சமத்துவம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கட்டுரை, கவிதை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டிகளில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற நபர்களுக்கு மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. கட்டுரை போட்டிகளில் 39 நபர்களும், கவிதை போட்டியில் 27 நபர்களும், ஓவியப்போட்டியில் 29 நபர்களும் கலந்து கொண்டனர்.
இதில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ஒவ்வொரு தலைப்பிற்கும் முதல் மூன்று இடங்களை பெற்ற 27 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை கலெக்டர் டாக்டர் ஜெயசீலன் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குனர் திலகவதி, மாநில ஊரக வாழ்வாதார இயக்குனர் தெய்வேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.