திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்-பரிசு: முதல்-அமைச்சர் வழங்கினார்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை,
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற 2022-23-ம் ஆண்டுக்கான திருக்குறள் முற்றோதல் போட்டியில் 124 மாணவர்கள் வெற்றி பெற்றனர். அவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசுத்தொகை வழங்கும் அடையாளமாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் சென்னை மாவட்டத்தை சேர்ந்த கா.நாகராஜன், ரா.விசாலாட்சி, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த செ.ஹேம்நாத், வெ.சந்தோஷ், சீ.நிவேதா, இர.காவ்யா, து.லோகிதா, செ.லக்சனா, காஞ்சீபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஞா.ச.சந்தோஷ் ஆகிய 9 மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுத்தொகை தலா ரூ.15 ஆயிரத்துக்கான காசோலையும், பாராட்டு சான்றிதழும் வழங்கி, வாழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமைச்செயலாளர் இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் டாக்டர் இரா.செல்வராஜ், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ந.அருள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
பணிநியமன ஆணை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் (குரூப்-1) பணியிடத்துக்கு இருசம்மாள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
மேலும், தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணைத்தால் தீயணைப்போர் பணியிடத்துக்கு 120 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இருசம்மாளுக்கும், தீயணைப்போர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 120 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் அடையாளமாக 5 பேருக்கும் பணி நியமன ஆணைகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ள மாவட்ட தீயணைப்பு அலுவலருக்கு 4 மாத நிறுவன பயிற்சியும், தீயணைப்போருக்கு 3 மாத அடிப்படை பயிற்சியும் சென்னையை அடுத்த தாம்பரத்தில் உள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மாநில பயிற்சி மையத்தில் வழங்கப்படும்.
இந்த நிகழ்ச்சியில் உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை முதன்மைச் செயலாளர் அமுதா, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் அபாஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.