அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகள் பயன்படுத்த வேண்டும்


அதிக விளைச்சல் பெற சான்று பெற்ற விதைகள் பயன்படுத்த வேண்டும்
x
நாமக்கல்

நாமக்கல் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் சித்திரைசெல்வி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறையால் சான்றளிப்பு செய்யப்பட்ட நிலக்கடலை மற்றும் உளுந்து ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை மூலமாக விதைச்சான்றளிப்பில் பதிவு செய்யப்பட்ட விதைப்பண்ணையில், விதைச்சான்று அலுவலர்கள் மூலம் வயலாய்வு செய்யப்பட்டு வயல் தரங்கள் உறுதி செய்யப்படுகின்றன.

வயல்தரங்களில் தேறிய விதைப்பண்ணைகளில், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பங்கள் முறையாக கடைபிடிக்கப்பட்டு அந்த வயல்மட்ட விதைகளை, அரசு அங்கீகரிக்கப்பட்ட விதை சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிப்பு செய்யப்பட்டு விதை மாதிரிகள் பகுப்பாய்வுக்கு அனுப்பப்படுகின்றன. பகுப்பாய்வில் விதைத்தரம் தேறிய விதைகள் சான்று செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. சான்று பெற்ற விதைகளில் ஆதாரநிலை விதைகளுக்கு வெள்ளை நிறச்சான்று அட்டையும் சான்று விதைகளுக்கு நீல நிற அட்டையும் பொருத்தப்படுகிறது.

மேலும் சான்று பெற்ற விதைகளில் வெள்ளை நிற அல்லது நீல நிற அட்டையுடன் ஒரு பச்சைநிற உற்பத்தியாளர் அட்டையும் கட்டப்பட்டிருக்கும். இதைக் கொண்டு சான்று பெற்ற விதைகளை விவசாயிகள் எளிதாகக் கண்டறியலாம். சான்று பெற்ற விதைகள் அதிக புறத்தூய்மை, அதிக இனத்தூய்மை, அதிக முளைப்புத்திறன், அளவான ஈரப்பதம் போன்ற குணநலன்களை கொண்டிருக்கும். எனவே, விவசாயிகள் சான்று பெற்ற விதைகளை வாங்கி பயிரிட்டு அதிக மகசூல் பெற்று பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story