திரவ உணவுகளை தயாரிக்கும்போதுதரச்சான்று பெற்ற நீரை பயன்படுத்த வேண்டும்


திரவ உணவுகளை தயாரிக்கும்போதுதரச்சான்று பெற்ற நீரை பயன்படுத்த வேண்டும்
x

நாமக்கல் மாவட்டத்தில் பழரசம், கம்மங்கூழ் போன்ற திரவ உணவை தயாரிக்கும் உணவு வணிகர்கள் தரச்சான்று பெற்ற குடிநீரை பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவுறுத்தி உள்ளார்.

நாமக்கல்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பாதுகாப்பு நெறிமுறைகள்

கோடைகாலம் தற்போது தொடங்கி உள்ளதால், பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூழ், பழரசம், சர்பத், கரும்புஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்கள் விற்பனை செய்யும் வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

சாலையோர உணவு வணிகர்கள், தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரவு நேரம் மட்டும் செயல்படும் உணவுகடைகள், சில்லிகடைகள் மற்றும் சமையல் கேட்டரிங் சர்வீஸ் உள்பட அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுசான்றிதழ் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும்.

தரச்சான்று பெற்ற குடிநீர்

மேலும் சில்லிகடைகள் மற்றும் உணவகங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தக் கூடாது. பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் மறுசுழற்சிக்கு பயன்படுத்த கூடாது. பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ உணவுகளை தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும்.

மேலும் பயன்படுத்தப்படும் குடிநீர் தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற குடிநீராக இருக்கவேண்டும். உணவு பொருட்களை நுகர்வோருக்கு வழங்கும் முன்னர் அதன் காலாவதி தேதியை உறுதிப்படுத்திட வேண்டும். மேலும், திரவ ஆகாரங்களை தயாரித்து அதற்கேற்ப வெப்ப நிலையில் வைத்திருக்க வேண்டும். கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களை தயாரித்த பின்னர் அதிகநேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது.

கம்மங்கூழ் போன்ற உணவுப் பொருட்கள் விற்பனையாகாமல் மீதமானால் அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். உணவு பொருட்களை திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக் கூடாது. பழச்சாறு தயாரித்து விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் அழுகிய மற்றும் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை பயன்படுத்தக் கூடாது. பழச்சாறு பிழியும் பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் தன் சுத்தத்தை பராமரித்தல் வேண்டும்.

செயற்கை வண்ணங்கள்

எந்த விதமான செயற்கை வண்ணங்களையும், இனிப்பு சுவை கூட்ட எவ்விதமான வேதிப்பொருட்களையும் சேர்க்கக்கூடாது. ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பைகளில் பழச்சாறுகளை வழங்காமல் அரசால் அனுமதிக்கப்பட்ட கோப்பைகளில் மட்டுமே வழங்க வேண்டும்.

இத்தகைய வழிகாட்டுதல்களை கடைபிடித்து பொதுமக்களுக்கு தரமான, பாதுகாப்பான குளிர்பானங்கள் மற்றும் பழச் சாறுகளை வழங்க வேண்டும். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் இம்மாதம் அதிகளவு கடைகளின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ் காலாவதியாக உள்ளதால் அனைத்து உணவு வணிகர்களும் கடையின் உரிமம் மற்றும் பதிவுச் சான்றிதழ்களை புதுப்பித்து கொள்ள வேண்டும்.

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்கள் வாங்கும் உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதார குறைபாடோ காணப்பட்டால் பொதுமக்கள் உணவு தொடர்பான புகார்களை 94440 42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ் அப் சேவை எண்ணுக்கு தெரிவிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story