கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பு நிறுத்தம்


கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பு நிறுத்தம்
x

வீட்டு மின் இணைப்புகளுக்கு மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

விருதுநகர்


வீட்டு மின் இணைப்புகளுக்கு மட்டும் கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை மின்வாரியம் நிறுத்தி வைத்துள்ளது.

கூடுதல் டெபாசிட்

தமிழகம் முழுவதும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் மின்கட்டணம் 2 மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்படும் நடைமுறை உள்ளது.

கூடுதலாக மின்சாரம் பயன்படுத்துவோரிடம் டெபாசிட் தொகை வசூலிக்கப்படுகிறது. டெபாசிட் தொகையை விட செலுத்த வேண்டிய மின் கட்டணம் அதிகரிக்கும் போது கூடுதல் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது. இந்த டெபாசிட் தொகை மின் கட்டண அட்டையில் குறிப்பிடப்படுவதில்லை. மின் கட்டணம் செலுத்த செல்லும் போது மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கு அவர்கள் செலுத்த வேண்டிய கூடுதல் டெபாசிட் தொகை தெரிவிக்கப்படுவதால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டது.

கடும் எதிர்ப்பு

இந்த நடைமுறைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனைத்தொடர்ந்து மின்வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்த செல்பவர்களிடம் டெபாசிட் தொகை வசூலிக்கப்பட்டு வந்தது. ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்துவோருக்கு ஆன்லைனிலேயே செலுத்த வேண்டிய கூடுதல்டெபாசிட் தொகையும் சேர்த்து தெரிவிக்கப்படும் நிலையில் அவர்கள் ஆன்லைனில் செலுத்த வேண்டிய நிலை தொடர்ந்தது. கடந்த 2 நாட்களாக வீட்டு இணைப்புகளுக்கான மின் கட்டணம் செலுத்த செல்லும் போது கணினியில் கூடுதல் டெபாசிட் தொகை தெரிவிக்கப்படவில்லை. ஆனால் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலை மின் கட்டணம் செலுத்தும் போது கூடுதல் டெபாசிட் சேர்த்து கணினியில் தெரிவிக்கப்படுகிறது.

அதிகார பூர்வ அறிவிப்பு

இதுபற்றி மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது மின்வாரிய தலைமையிடமிருந்து கூடுதல் டெபாசிட் வசூல் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வராத நிலையில் வீட்டு இணைப்புக்கான மின் கட்டணத்தில் கூடுதல் டெபாசிட் தொகை ஏதும் சேர்க்கப்படாத நிலையில் நுகர்வோரிடமிருந்து மின் கட்டண தொகை மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆனால் வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தோடு கூடுதல் டெபாசிட் தேவைப்படும் பட்சத்தில் கூடுதல் டெபாசிட் வசூலிக்கப்படுகிறது என தெரிவித்தார்.


Next Story