வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த ெபண்ணிடம் மிளகாய்பொடியை தூவி 7 பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கொள்ளையன்- அந்தியூர் அருகே பரபரப்பு
அந்தியூர் அருகே வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் நகையை முகமூடி கொள்ளையன் பறித்து சென்றான்.
அந்தியூர்
அந்தியூர் அருகே வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்த பெண்ணிடம் மிளகாய் பொடியை தூவி 7 பவுன் நகையை முகமூடி கொள்ளையன் பறித்து சென்றான்.
தாலிச்சங்கிலி பறிப்பு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சக்திவேல். இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 48). நேற்று முன்தினம் சக்திவேல் வேலைக்கு சென்றுவிட்டார். தனியாக இருந்த விஜயலட்சுமி மதியம் 12.30 மணி அளவில் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் திடீரென வீட்டுக்குள் வந்தான். அவனை பார்த்து திடுக்கிட்ட விஜயலட்சுமி கத்த முயன்றார். உடனே கொள்ளையன் மிளகாய் பொடியை விஜயலட்சுமியின் முகத்தில் தூவினான். இதனால் அவர் நிலை குலைந்துபோனார். உடனே கொள்ளையன் விஜயலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிச்சங்கிலியை பறித்துக்கொண்டு வெளியே ஓடிவிட்டான்.
தொடர் சம்பவங்கள்
இதுபற்றி உடனே விஜயலட்சுமி கணவருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் ஆப்பக்கூடல் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீடுபுகுந்து நகையை கொள்ளையடித்து ெசன்ற முகமூடி கொள்ளையனை வலைவீசி தேடி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் அந்தியூர் பகுதியில் பூட்டியிருந்த வீட்டில், பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் நகை, பணத்தை திருடிச்சென்றார்கள்.
தொடர் திருட்டு, கொள்ளை சம்பவங்கள் நடப்பதால் அந்த பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.