தாய்க்கு உடம்பு சரியில்லை என்று கூறி மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர்
தர்மபுரியை அடுத்த சவுளுப்பட்டியில் அரசு கலை கல்லூரி மாணவிகள் விடுதி எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜம்மாள் (வயது 78) என்ற மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். இவருடைய வீட்டுக்குள் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த வாலிபர் ஒருவர் புகுந்தார். அவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மூதாட்டி ராஜம்மாளை மிரட்டி, அவர் அணிந்திருந்த நகையை கழட்டி கொடுக்குமாறு கேட்டார். ஆனால் மூதாட்டி நகையை கொடுக்க மறுத்தார். இதனால் செய்வதறியாது திகைத்த அந்த வாலிபர் வேறு வழியை கையாண்டார். அதாவது 'எனது தாய்க்கு உடம்பு சரியில்லை. மருந்து, மாத்திரை வாங்குவதற்கு பணம் இல்லாததால், எனக்கு வேறு வழி தெரியவில்லை. தயவு செய்து நகையை கொடுத்து விடுங்கள்' என்று கெஞ்சி கேட்டுள்ளார். இதையடுத்து அவர் மூதாட்டி அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்து விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் குறித்து நல்லம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.