மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை தலைவர்- கவுன்சிலர்கள் புறக்கணிப்பு


மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தை தலைவர்- கவுன்சிலர்கள் புறக்கணிப்பு
x
தினத்தந்தி 29 July 2023 1:00 AM IST (Updated: 29 July 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டத்தை தலைவர் உள்ளிட்ட அனைத்து கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

மாவட்ட ஊராட்சி குழு கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஊராட்சி கூட்ட மன்றத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இந்த கூட்டம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்ட கவுன்சிலர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று காலை மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன், துணை தலைவர் சரஸ்வதி முருகசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்திருந்தனர். கூட்டத்திற்கான அஜண்டா வழங்கப்பட்டது. ஒருசில கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் அமர்ந்திருந்தனர். ஒருசில கவுன்சிலர்கள் தலைவரின் அறையில் அமர்ந்திருந்தனர். திடீரென கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அனைவரும் வெளியே வந்தனர். கூட்டம் தேதி குறிப்பிடாமல் பின்னர் தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

பணி ஆணை

இதுகுறித்து மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்ட ஊராட்சி குழுவில் தலைவர், துணை தலைவர் மற்றும் 16 கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க.-7, அ.தி.மு.க. -6, பா.ம.க. -3, தே.மு.தி.க.-1, வி.சி.க.-1 கட்சியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மாவட்ட ஊராட்சிக்கு வரவேண்டிய 15-வது நிதி குழுவின் நிதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பொது நிதி ரூ.2 கோடியே 48 லட்சம் மதிப்பீட்டில் திட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு கவுன்சிலருக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகள் 18 பேருக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டது. மாவட்ட கவுன்சிலர்கள் பணிகளுக்கான பரிந்துரைகளை செய்து விட்டனர். ஆனால் 3 மாதங்களையும் திட்டப்பணிகள் செய்ய பணி ஆணை வழங்கப்படவில்லை.

என்னால் மாவட்ட கவுன்சிலர்கள் கிராமங்களில் பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் சிரமப்படுகிறார்கள். மாவட்ட ஊராட்சிக்கு முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. 2 மாதத்துக்கு ஒரு முறையாவது கூட்டம் நடத்த வேண்டும். ஒவ்வொரு கூட்டத்திலும் திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. இது குறித்து மாவட்ட ஊராட்சி செயலாளரிடம் முறையிட்டால் எந்த பதிலும் தெரிவிப்பதில்லை. என்று மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் பரிந்துரை செய்யப்பட்ட திட்ட பணிகளுக்கு பணிஆணை வழங்காததை கண்டித்து நாங்கள் கூட்டத்தை புறக்கணித்து உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் பரிந்துரை செய்யும் திட்ட பணிகளுக்கு பணி ஆணை வழங்கக்கூடாது என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அரசின் வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக கூறப்படுகிறது.


Next Story