வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு- செயல் அலுவலரை கண்டித்து கோஷம்


வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில்  தலைவர், கவுன்சிலர்கள் வெளிநடப்பு-  செயல் அலுவலரை கண்டித்து கோஷம்
x

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து கோஷம் எழுப்பினார்கள்

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து கூட்டத்தில் செயல் அலுவலரை கண்டித்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து கோஷம் எழுப்பினார்கள்.

கூட்டம்

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து சாதாரண கூட்டம் நேற்று காலை பேரூராட்சி மன்ற வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் லைலா பானு, நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், செலவினங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்கள் குறித்த தீர்மானங்களை வாசித்த போது, 15-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் மாரிமுத்து செலவினங்கள் குறித்து எழுப்பிய கேள்விக்கு வெளிப்படை தன்மையாக செயல் அலுவலர் பதில் கூறவில்லை என்று கூறி கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

வெளிநடப்பு

இதைத்தொடர்ந்து நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், துணைத்தலைவர் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் வெளிநடப்பு செய்தனர். கூட்டம் பாதியில் முடிவடைந்தது.

பின்னர் பேரூராட்சி அலுவலகம் முன்பு நின்று கொண்டு, வெளிப்படைத்தன்மை இல்லாமல் தன்னிச்சையாக செயல்படுவதாக கூறி, செயல் அலுவலர் சுதா மற்றும் இளநிலை பொறியாளர் பாலகிருஷ்ணன் ஆகியோரை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தகவல் தெரிவிப்பது இல்லை

இதுகுறித்து நகர பஞ்சாயத்து தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் கூறியதாவது:-

செயல் அலுவலரும், திட்டங்களை மதிப்பீடு செய்கின்ற இளநிலை பொறியாளரும் எங்கள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைவர், துணைத் தலைவர்களுக்கு எந்தவித தகவலை தெரிவிப்பது இல்லை. வேலைகளை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர்.

சாதாரண கூட்டம், நான்கு கூட்டங்கள் நடைபெற்று உள்ளன. எந்த கூட்டத்திலும் தெளிவான திட்டங்களும், தெளிவான செலவினங்களும் தீர்மானங்களாக வைக்கப்படவில்லை. கூட்டத்தை புறக்கணித்தும், செயல் அலுவலர் சுதாவை கண்டித்தும் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.




Next Story