அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


அடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 7 Nov 2023 5:52 AM IST (Updated: 7 Nov 2023 6:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, பெரும்பாலான மாவட்டங்களில் ஆங்காங்கே பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், அதிகபட்சமாக தென்காசியில் 12 செ.மீ., மழை பதிவானது. தென்காசி மாவட்டம் ஆய்குடியில் 10 செ.மீ., மழையும், மதுரை மாவட்டம் எழுமலையில் 9 செ.மீ., மழையும் பெய்துள்ளது. இந்நிலையில், அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.

கனமழை எச்சரிக்கை

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வுமையம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதேபோல், கேரள கடலோர பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மற்றொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், நாமக்கல், திருப்பூர், கரூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நாளை (புதன்கிழமை) கனமழைக்கு வாய்ப்பு உண்டு. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் நவம்பர் 12-ந்தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உண்டு.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story